Our Feeds


Thursday, October 8, 2020

www.shortnews.lk

வெளிநாட்டில் இருந்து வந்தவரின் கவனயீனத்தினால் மினுவங்கொட பெண்ணுக்கு கொரோனா பரவியிருக்கலாம் - இராணுவ தளபதி

 


மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் கொத்தணி, வெளிநாட்டில் இருந்து வருகைத்தந்தவர் அல்லது குழுவின் கவனயீனத்தால் உருவாகியிருக்கலாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


சமூகத்தில் உள்ள தொற்றாளர் ஒருவரின் மூலம் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு தொற்று பரவியிருக்க எந்தவித வாய்ப்பும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கடந்த நான்காம் திகதி தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண் மூலம் ஏனையோருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அந்த கொத்தணி, வெளிநாட்டில் இருந்து வருகைத்தந்தவர் அல்லது ஒரு குழுவின் கவனயீனத்தால் உருவாகியிருக்கலாம் என சந்தேகிப்பதாக நேற்றிரவு தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ´அளுத் பாரளிமத்துவ´ நிகழ்ச்சியில் பங்கேற்ற இராணுவத் தளபதி கூறியுள்ளார். குறித்த தொழிற்சாலையில் கடமைப்புரிந்து இது தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்படாதவர்கள் பொலிஸ் நிலையங்களில் சரணடைய காலை 10 மணி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதேவேளை நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த எதிர்ப்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை கூடிய விரைவில் வெளியிட எதிர்பார்ப்பதாக அவர் அளுத் பாராளிமத்துவ நிகழ்ச்சியில் பங்கேற்ற போது தெரிவித்தார்.

இதேவேளை வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய இராணுவ தளபதி கூறினார்.

எதிர்வரும் 7 நாட்களுக்கு பொது மக்கள் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்தால் தலை தூக்கியுள்ள கொவிட் 19 பரவல் அச்சுறுத்தல் நிலைமையை வெகுவாக கட்டுப்படுத்த முடியும் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »