Our Feeds


Friday, October 23, 2020

www.shortnews.lk

கொரோனா பற்றிய உண்மை தரவுகளை அரசு வெளிப்படுத்த வேண்டும் - எதிர் கட்சி தலைவர் சஜித்

 



கொரோனா தொடர்பான அரசாங்கத்தின் உண்மையான தரவுகளை வெளிப்படுத்தவேண்டும். தரவுகளை மறைப்பதால் பாரிய அனர்த்தம் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. அத்துடன் சமூக பரவல் ஏற்படும் அபாயம் இருப்பதை ஏற்றுக்கொண்டு அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் இன்று கொரோனா சுகாதார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


கொவிட் தொற்று கொத்தனியாக நாட்டில் பல பிரதேசங்களில் இருந்து பரவி வருகின்றது. இவ்வாறான கொத்தனிகள் சமூக மட்டத்துக்கு பரவும் அபாயம் இருப்பதாக அரசாங்க வைத்தியர் சங்கம் தெரிவித்திருக்கின்றது. ஆனால் அரசாங்கம் அதனை மறைத்து வருகின்றது.


கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய சில ஆலோசனைகளை கடந்த ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் தெரிவித்து வந்தோம். ஆனால் அரசாங்கம் அதனை நகைச்சுவைக்கு எடுத்துக்கொண்டு அரசியல் ரீதியில் விமர்சித்து வந்தனர்.


அத்துடன் நாங்கள் அன்று தெரிவித்த விடயங்களை விமர்சித்த அரசாங்கம் தற்போது அதனை உணர்ந்து செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இவர்களின் காலதாமதத்தினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. கொரோனாவை கட்டுப்படுத்துவதை விட அரசியல் நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.


மேலும் நாட்டில் இரண்டாவது அலையாக மீண்டும் தலைதூக்கி இருக்கும் கொரோனா தொற்று கொத்தனியாக வியாபித்து பல கொத்தனிகள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் கொத்தனிகளின் ஆரம்பத்தை அறிந்துகொள்ள முடியாமல் இருப்பதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்திருக்கின்றார். 


அத்துடன் கொரோனா தொற்றாளர்கள் மற்றும்  சந்தேகத்துக்குரியவர்கள் அதிகரித்து செல்கின்றனர். இவர்களுக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை செய்து பெறுபேற்றை பெற்றுக்கொள்ள காலதாமதம் ஏற்படுகின்றது. இதனால் தொற்றாளர்கள் மேலும் அதிகரிக்கும் நிலையே இருக்கின்றது. அதேபோன்று பீ.சீ.ஆர். மாதிரிகள் பரிசோதனைக்காக குவிந்திருப்பதாக தெரியவருகின்றது. அதேநிலையில் பீ.சீ.ஆர். பரிசோதனை இன்று வியாபாரமாக மாறிவருகின்றது எனவும் அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »