சவுதி அரேபியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டை முன்னிட்டு அந்நாட்டு அரசு வெளியுட்டுள்ள 20 ரியால் நோட்டில் ஜம்மு காஷ்மீர் இன்றி இந்தியா வரைபடம் அச்சிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி அந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு நீக்கிய மத்திய அரசு அதனை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. இந்தியாவின் இந்த செயலுக்கு பாகிஸ்தான், துருக்கி, மலேசியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இந்த வரிசையில் இணையாத சவுதி அரேபியா காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கருத்து தெரிவித்தது. சவுதி அரேபியாவின் இந்த செயல் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இதனை சமூக ஊடகங்களில் கண்ட பலரும் இந்தியாவின் தலையை விட்டு விட்டு இந்திய வரைபடம் அச்சிட்டப்பட்டுள்ளதை கண்டு அந்நாட்டு அரசை விமர்சித்து வந்தனர். இதனை கவனித்த மத்திய அரசு, சவுதி அரேபியாவுக்கு கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ளது. இது தொடர்பாக சவுதி அரசுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், ஜி 20 மாநாட்டை முன்னிட்டு நீங்கள் வெளியிட்டுள்ள 20 ரியால் ரூபாய் நோட்டில் இந்தியாவின் வெளி பிராந்திய எல்லைகள் மொத்தமாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை சவுதி அரசு உடனே கவனத்தில் கொள்ள வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் முழு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என தெரிவித்துள்ளது.