உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கிய முன்னாள் பொலிஸ்மா அதிபர் கடந்த ஏப்ரல் நான்காம் திகதி தாக்குதல் குறித்து தம்மை தொலைப்பேசியில் அழைத்து தெளிவுப்படுத்தியதாக கூறியிருப்பது முற்றிலும் பொய் என பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஓய்வூப்பெற்ற சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லதீப் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்படும் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்ட ஓய்வூப்பெற்ற சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீப் நேற்று ஆணைக்குழுவில் மூன்றாவது முறையாகவும் சாட்சி வழங்கிய போதே இதனை தெரிவித்தார்.
இதன்போது அரச சிரேஸ்ட சட்டத்தரணி வனாத்தவில்லு பகுதியில் வெடி பொருட்களை கண்டெடுத்தமை, மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலைகள் மீதான தாக்குதல் மற்றும் தஸ்லின் மீதான படுகொலை முயற்சி ஆகியவற்றில் ஸஹ்ரான் ஹாசிம் ஈடுபட்டதாக தகவல் இருக்கும் நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் 4 ஆம் திகதி தாக்குதல் குறித்து வெளிநாட்டு புலனாய்வு பிரிவு வழங்கிய ஆரம்பகட்ட தகவல்களுக்கு அமைய அதனை நம்பாமல் இருந்தமைக்கு அரச புலனாய்வு பிரிவுக்கு ஏதேனும் காரணங்கள் இருந்தனவா? என வினவினார்.
இதற்கு பதிலளித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஓய்வூப்பெற்ற சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீப் ´இல்லை´ என பதில் வழங்கினார்.
அப்படியானால் அந்த வெளிநாட்டு புலனாய்வு தகவல்களை மற்ற பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கும் போது அரச புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் சம்பந்தமாக இரகசியமான முறையில் விசாரணைகள் இடம்பெற்றன என்ற வார்த்தையை உபயோகித்தமை குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன என அரச சிரேஸ்ட சட்டத்தரணி மறுபடியும் அவரிடம் வினவினார்.
அதற்கு பதிலளித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஓய்வூப்பெற்ற சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீப், அவ்வாறான வாக்கியத்தை அரச புலனாய்வு பிரிவு ஒரு போதும் உள்ளடக்கவில்லை என கூறினார்.
அத்துடன் அவ்வாறு தெரிவிக்கப்பட்ட புலனாய்வுத் தகவல் குறித்த உண்மைத்தன்மை உண்மைக்கு புரம்பானதாக மாற்றப்பட்டிருந்தாகவும் கூறினார்.
மேலும், கடந்த ஏப்ரல் நான்காம் திகதி பரிமாற்றப்பட்ட வெளிநாட்டு புலனாய்வு தகவல் குறித்த ஆவணம் ஒரு போதும் கிடைக்கவில்லை எனவும், அவ்வாறு பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்பான ஆவணம் கிடைத்திருந்தால் தனக்கு உரிய வகையில் செயற்பட்டிருக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
இதன்போது, கடந்த ஏப்ரல் நான்காம் திகதி கிடைத்த வெளிநாட்டு புலனாய்வு தகவல்களை ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு பின்னர் அப்போதைய பொலிஸ்மா அதிபர் அது தொடர்பில் தொலைப்பேசியில் உங்களுக்கு தெரியப்படுத்தியதாக சாட்சி அளித்திருந்தால் அதனை ஏற்றுக் கொள்வீர்களா? என அரச சிரேஸ்ட சட்டத்தரணி மறுபடியும் வினவினார்.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் அவ்வாறு சாட்சி வழங்கியிருந்தால் அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என கூறிய விசேட அதிரடிப்படையின் ஓய்வூப்பெற்ற சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீப், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தம்மை தொலைப்பேசியில் அழைத்து ஒரு போதும் வெளிநாட்டு புலனாய்வு தகவல் குறித்து தெளிவுப்படுத்தவில்லை என கூறினார்.