உத்திரப்பிரதேச மாநிலம், பாக்பத் (Baghpat) மாவட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் அனுமதியின்றி தாடிவைத்திருந்ததாக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். காவல்துறையின் விதிமுறைகளின்படி சீக்கியர்களுக்கு மட்டுமே தாடி வைத்துக்கொள்ள அனுமதி என்று பாக்பத் காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் சிங் கூறியிருக்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, உத்தரப்பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றிவருகிறார் இன்டெசர் அலி. இவர் பணிக்கு வரும்போது முகத்தில் தாடி வைத்துக்கொண்டு வருவதாகவும், மூன்று முறை தாடியை எடுக்கச் சொல்லி உயரதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அல்லது தாடி வைத்துக்கொள்ள உயரதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டு தாடி வைத்துக்கொள்ள அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தநிலையில், இன்டெசர் அலி, உயரதிகாரிகளிடமிருந்து எந்த ஓர் அனுமதியும் பெறாமல் தொடர்ந்து தாடியுடன் பணியாற்றிவந்திருக்கிறார். இதையடுத்து, பாக்பத் காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் சிங், உதவி ஆய்வாளர் அலியை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.
இது குறித்துப் பேசிய பாக்பத் எஸ்.பி அபிஷேக் சிங், ``காவல்துறை விதிமுறைகளின்படி சீக்கியர்களுக்கு மட்டுமே தாடி வைத்துகொள்ள அனுமதி இருக்கிறது. மற்ற காவலர்கள் அனைவரும் ஷேவ் செய்து தாடியை எடுத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
மேலும், ``காவலர்கள் எவரேனும் தாடி வைத்துக்கொள்ள விரும்பினால், அவர்கள் உயரதிகாரிகளிடம் அனுமதியைப் பெற்று தாடி வைத்துக்கொள்ளலாம். இன்டெசர் அலியிடம் பல முறை அனுமதி பெறச்சொல்லியும், அலி அனுமதி பெறாமல் தாடி வைத்திருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது" என்றார்.
இந்தச் சர்ச்சை குறித்துப் பேசிய இன்டெசர் அலி, `தாடி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தேன். ஆனால், அதற்கு அதிகாரிகளிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை" என்று தெரிவித்தார்.