பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன உள்ளிட்ட 13 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதோடு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் இவ்விடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளராகவும், ஊடக பேச்சாளராகவும் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன, வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் உதவியாளராக, காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அண்மையில், விடுதலை செய்யப்பட்ட ரியாஜ் பதியுதீன் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமை தொடர்பில் ஜாலிய சேனாரத்ன மீது விசனம் எழுந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையாக இவ்விடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அது தவிர, 8 பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் (DIG), பொலிஸ் அத்தியட்சகர் (SP) ஒருவர், 3 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் (ASP) இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொலிஸ் சட்ட ஒழுங்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண, குறித்த பொறுப்பிற்கு மேலதிகமாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், காலி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கே.என்.ஜே. வெதசிங்க, மேல் மாகாண வடக்கு பிரிவிற்கான பதில் பிரதிப் பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் டிசம்பர் 30ஆம் திகதி பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்ட ஜாலிய சேனாரத்ன, தனது குறித்த பதவிக் காலத்தில் பங்களிப்பு வழங்கிய ஊடக நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.