சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி ராஜேந்திரன் உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கிய நபருக்கு இனந்தெரியாதவர்கள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக கல்முனை நீதிமன்ற நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு பரிசோதனை அறிக்கைகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் மரபணு பரிசோதனை அறிக்கை பொருந்தவில்லை என மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அடுத்து அவர் தப்பி சென்றுவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு விசாரணையை தொடர்ந்து தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்று சில தினங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி புறநகர் பகுதி ஒன்றில் புலஸ்தினியை கண்டதாக 43 வயதான ஒருவர் பாதுகாப்பு தரப்பினரிடம் தகவல் வழங்கிருந்தார்.
இவ்வாறு தகவல் வழங்கிய குறித்த நபருக்கு தற்போது இனந்தெரியாதோரினால் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணி ஊடாக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆராய்ந்த நீதவான் மேலதிக நடவடிக்கையை எடுப்பதற்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வரை குறித்த வழக்கின் விசாரணைகளை ஒத்திவைத்துள்ளார்.
இதேவேளை சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநபர்களை மீண்டும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.