பிரான்ஸ் உலக தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய நாடுகள் என பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை புனித மக்காவில் அமைந்துள்ள கஃபதுல்லாவில் இடம் பெற்ற குத்பா உரையில் பிரான்ஸின் இஸ்லாமிய விரோத செயல்பாட்டுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டார் இமாம் அப்துர் ரஹ்மான் சுதைசி
அப்துர் ரஹ்மான் சுதைசி அவர்கள் பேசிய ஜும்ஆ உரையில் இவ்வாறு தெரிவித்தார்.
அல்லாஹ்வின் நபிமார்கள் மற்றும் தூதர்கள் மீது கூறப்படும் எந்தவிதமான அவமதிப்பாக இருந்தாலும் கடுமையான சொற்களாக இருந்தாலும் அவற்றை நாம் கண்டிக்கிறோம். இதனை உலகில் வாழும் 1.8 பில்லியன் முஸ்லிம்களின் பெயரில் நாங்கள் கூறுகிறோம்.
அல்லாஹ்வின் வழிகாட்டுதல் மற்றும் கருணை நம் தலைவரும் நபியுமான முஹம்மத் (ஸல்) அவர்கள் விஷயத்தில் அது தெளிவாக உள்ளது - அல்லாஹ் முஹம்மத் நபியவர்களுக்கு பாராட்டுகளையும் பாதுகாப்பையும் வழங்கட்டும்
தவறான முறையில் சித்தரிக்க முற்படும் கோலிச் சித்திரங்களை வெளியிடுதல் மற்றும் அதற்கு ஊக்கமளித்தல் போன்றவை பயங்கரவாதத்தின் ஒரு வடிவம் மாத்திரமன்றி வெருப்புக்கும் மதவெறிக்கும் ஊக்கமளிக்கும் தீவிரவாத செயல்பாடாகும்.
மதத் தலைவர்களை கேலி செய்வதோ அல்லது மக்கள் புனிதமாகக் கருதும் விஷயங்களை கேலி செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதோ ஒரு போதும் கருத்துச் சுதந்திரமாக கருதப்படாது. மாறாக, இத்தகைய நடத்தைகள் சரியான நெறிமுறைகளையும் ஒழுக்கத்தையும் மீறுகின்ற, ஏற்றுக்கொள்ள முடியாத செயல்பாடுகளாகும்.
ஏனென்றால், மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதை அடிப்படையாகக் கொண்ட மனித செயல்பாடுகளுக்கு உரிய கவனம் செலுத்துவது கருத்துச் சுதந்திரத்திற்கு அவசியமாகும்.
இத்தகைய தவறான செயல்பாடுகள் ஒழுக்கமான நடத்தைகளைக் கொண்ட சமூகங்களிடையே வெறுப்பை பரப்ப முற்படும் தீவிரவாத சிந்தனைகளைக் கொண்ட நபர்களுக்கு ஆதரவளிக்கின்றன.
எப்படிப் பார்த்தாலும் நபியை அவமதிக்க முயலும் இவர்களின் இந்த எதிர்மறையான விஷயங்கள் அனைத்திலும் இஸ்லாம் குற்றமற்ற மார்க்கம் என்பது தெளிவாகிறது, மேலும் எந்தவொரு பயங்கரவாத செயல்பாட்டுடனும் இஸ்லாத்தை முத்திரை குத்த முடியாத அளவுக்கு இஸ்லாம் குற்றமற்ற தெளிவான, சகிப்புத் தன்மை கொண்ட கருணை மற்றும் நல்லிணக்கத்தின் மார்க்கமாகும்.
இஸ்லாத்தின் போதனைகளில் பயங்கரவாதத்திற்கோ தீவிரவாதத்திற்கோ, நாசமான காரியங்களுக்கோ, கேலி, அவமதிப்பு போன்ற செயல்பாடுகளுக்கோ எவ்வித அனுமதியும் வழங்கப்படுவதில்லை.
அதே போல் உயர்ந்தவனான அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட எந்தத் தூதரையும் இஸ்லாம் மறுப்பதும் இல்லை என்பதே யதார்த்த உண்மையாகும். என்று தெரிவித்தார்.