Our Feeds


Wednesday, October 14, 2020

www.shortnews.lk

விஜேதாச ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு காதல் கடிதம் எழுதியுள்ளார். - மனோ கணேசன் சாடல்

 



நாட்டை பிடித்திருக்கும் நோய் கோவிட்-19. ஆனால், 20 திருத்தத்தை வைத்துக்கொண்டு தள்ளாடும் அரசாங்கத்தை பிடித்திருக்கும் நோய் “கோவிட்- 20” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


இன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் மேலும் கூறியுள்ளதாவது, அரசின் உள்ளே இப்போது 20 திருத்தம் தொடர்பில் பெரும் கலகம் நடைபெறுகிறது. எதிரணியில் நாம் இதை எதிர்ப்பதை போன்று அரசுக்குள் இருந்து பலர் எதிர்குரல் எழுப்ப தொடங்கி விட்டார்கள்.

அமைச்சர்கள் விதுர விக்கிரமநாயக்க, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளார்கள். ஜனாதிபதிக்கு நெருக்கமான விதமாக பாராளுமன்ற உறுப்பினர் கேவிந்து குமாரதுங்க எதிர்க்கிறார். பாராளுமன்ற விஜயதாச ராஜபக்ச இப்போது இரண்டாவது முறை 20 திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு “காதல்” கடிதம் எழுதியுள்ளார். இதற்கு பதில் இல்லை. அது ஒருதலைபட்ச காதல் போலிருக்கிறது. அரசுக்கு ஆதரவு அளித்த பல தேரர்கள், சமூக தலைவர்கள் எதிர்குரல் எழுப்புகிறார்கள். இதுதான் இன்று அரசை பிடித்துள்ள கோவிட்- 20 நோயாகும்.

இதை மறைக்கவே இன்று இந்த அரசு, வழமைபோல் இனவாதத்தை கையில் எடுத்துள்ளது. அதனாலேயே நண்பர் ரிசாத் பதியுதீன் மீது கைது முயற்சி நடைபெறுகிறது. அவரை கைது செய்து விட்டு, நாட்டில் “ரிசாத் கைது” என செய்தி தலைப்பை உருவாக்க அரசு முயல்கிறது. இன்று சிங்கள மொழி தேசிய பத்திரிகைகளில், தலைப்பு செய்தி என்ன?

“ரிசாத் பதியுதீனை கைது செய்ய சட்ட மாஅதிபர் அறிவுறுத்தல். ரிசாத்தை தேடி ஆறு பொலிஸ் குழுக்கள் வலை விரிப்பு”, என்பதே இன்றைய சிங்கள பத்திரிக்கைகளின் தலைப்பு செய்திகள். இது அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில், பிழையான கருத்தை கொண்டு செல்கிறது. விபரம் அறியாத பாமர கிராமத்து சிங்கள மக்கள் மத்தியில், இன்று ரிசாத், உயிர்த்த ஞாயிறு தொடர்பில், கைதாகிறார் என்ற மாதிரியான செய்தி மயக்கத்தை அரசு பரப்புகிறது.

புத்தளம் மாவட்டத்தில் வாழும் மன்னார் மாவட்ட வாக்காளர்களை, மன்னாரில் அமைந்துள்ள வாக்கு சாவடிகளுக்கு, இபோச பேரூந்து வண்டிகளில் கொண்டு சென்றது தொடர்பில், செலவான அரசு பணம் தொண்ணூறு இலட்சம். இது அப்போதே மீள செலுத்தப்பட்டு விட்டது. மேலும் இது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட அரச நிதி அல்ல. இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்க வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மக்களின் வாக்குரிமை தொடர்பில், மக்கள் பிரதிநிதிகளுக்கு கடப்பாடு இருக்கிறது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கும் கடப்பாடு இருக்கிறது. அவர் இது பற்றி என்ன சொல்கிறார்?

இந்த உண்மைகளை மூடி மறைத்து, அரச வளங்களை தவறாக பயன்படுத்தினார் என்று குற்றம் சுமத்தி, பிணை வழங்க முடியாத, வழக்கில் ரிசாத்தை மாட்டி விட்டு, அரசு, தான் எதிர்கொள்ளும் “கோவிட்- 20” பிரச்சினைகளை மூடி மறைக்க முயல்கிறது.

2019ம் வருட ஜனாதிபதி தேர்தலில் நடைபெற்ற இடம்பெற்றதாக சொல்லப்படும் இந்த விவகாரம் தொடர்பில், சட்ட மாஅதிபர் இதுவரை தூங்கி கொண்டு இருந்தாரா? இல்லை, அவரும், இப்போது அரசியல் செய்கிறாரா?

அப்படியானால், இதே ராஜபக்ச அரசு, 2015ம் வருட தேர்தலில், தங்கள் தேர்தல் கூட்டங்களுக்காக பயன்படுத்திய அரச வளங்களுக்கான கட்டணங்களை மீள செலுத்தி விட்டதா? வாக்களிக்க அல்ல, தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு மக்களை அழைத்து செல்ல பயன்படுத்திய இபோச பேரூந்து கட்டணங்கள், விளம்பரங்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்த விமானபடை நிறுவன ஹெலிகொப்டர் வாடகை என பல கோடி ரூபாய்கள் நிலுவையில் இருக்கின்றன. ஆகவே இவர்களை எல்லாம், சட்ட மாஅதிபரால், கைது செய்ய உத்தரவு இட முடியாதா?

அரசாங்கம் என்ன செய்வது என தெரியாமல், சந்தைக்கு வந்து அன்றன்று வருமானம் தேடும் நாள்சம்பள தொழிலாளர்களை போல், ஒவ்வொரு நாளும் தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க ஒவ்வொரு நாள் காலையிலும் ஒவ்வொரு முடிவுகளை எடுக்கிறது.

முதல்நாள், ரிசாத்தின் சகோதரர் ரியாத்தை குற்றமற்றவர் என விடுவிக்கிறது. மறுநாள், பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன மீது பழி சுமத்தி அவரை காங்கேசன்துறைக்கு இடமாற்றம் செய்கிறது. அடுத்த நாள், ஜாலியவை மீண்டும் கொழும்புக்கு கொண்டு வருகிறது. அடுத்தநாள், அரச பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு ரியாத்தை கைது செய்யுங்கள் என கடிதம் எழுத வைக்கிறது. அப்புறம், இப்போது அரச வளங்களை தவறாக பயன்படுத்தினார் என்று குற்றம் சுமத்தி ரிசாத்தை கைது செய்ய முயல்கிறது.

ரிசாத், ரியாத் சகோதர்கள் மீது அரசுக்கு குற்றம் சுமத்த முடியவில்லையே. குற்றம் சுமத்திய அரசாங்கமே குற்றமற்றவர் என விடுவிக்கிறதே. ஆகவே உண்மையில் கைது செய்யப்பட வேண்டியவர்கள், இவர்கள் அல்ல.

கடந்த காலங்களில், உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பில், தம்மிடம் முழுமையான சாட்சியங்கள், தகவல்கள் இருக்கின்றன என்று பகிரங்கமாக பலமுறை கூக்குரல் இட்ட விமல் வீரவன்ச போன்றோரைதான் அரசு கைது செய்ய வேண்டும். பொய் சாட்சியம் கூறினார்கள் அல்லது இன்னமும் தங்களிடம் இருக்கின்ற தகவல்களை மறைக்கின்றர்கள் என விமல் வீரவன்ச மற்றும் அன்று வரிசையாக சிஐடி தலைமையகம் சென்ற அனைவரையும் அரசு கைது செய்து, உடன் விசாரித்து, உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பில் உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டும்.

அதை விடுத்து, தன்னை பிடித்துள்ள இந்த “கோவிட்- 20” நோய்க்கு மருந்து தேடக்கூடாது. ஏனெனில் கோவிட்-19னை போல் இந்த நோய்க்கும் மருந்தில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »