''கொரோனா தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சைக்கு உதவிசெய்யும் பல ஆராய்ச்சிகளை நாங்கள் ரஷ்யாவிடம் இருந்து காப்பாற்றி வருகிறோம்.''
பலதரப்பட்ட அச்சுறுத்தல்களிலிருந்து கோவிட் - 19 தடுப்பூசி ஆராய்ச்சிகளைப் காப்பாற்றி வருவதாக பிரிட்டனின் உளவுத்துறையான MI5 தெரிவித்துள்ளது. இதுகுறித்து அத்துறையின் இயக்குநர் ஜெனரல் கென் மெக்கல்லம் விரிவாகப் பேட்டி அளித்துள்ளார். அவர் இயக்குநராகப் பதவி ஏற்ற பின், பத்திரிகையாளர்களுக்குக் கொடுக்கும் முதல் நேரடிப் பேட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலகெங்கிலும் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் 42 சோதனைகள் மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்ட மனிதர்களிடம் சோதனை செய்யப்படுகின்றன. இவற்றில், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் உரிமம் பெற்ற 'ஆஸ்ட்ரா ஜெனெகா' நிறுவனம் கிட்டத்தட்ட தனது இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது. உலகில் எந்த நிறுவனம் முதலில் வெற்றிகரமாக தடுப்பூசியை கண்டுபிடிக்கிறதோ அந்நிறுவனம் வரலாற்றில் இடம்பிடிப்பதோடு, அதற்குப் பணமும் புகழும் கிடைக்கும் என்பதால் பல நிறுவனங்கள் தீவிரமாக ஆராய்ச்சிகளை மேற்கொன்டு வருவதாக மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் , ’’இந்தக் கொரோனா தொற்றால் எங்களுக்குப் புதிதாகப் பல வேலைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக கொரோனா தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சைக்கு உதவிசெய்யும் பல ஆராய்ச்சிகளை நாங்கள் ரஷ்யாவிடமிருந்து காப்பாற்றி வருகிறோம். ரஷ்யா எங்களிடமிருந்து தகவல்களைத் திருடக் காத்துக்கொண்டிருக்கிறது’’ என்றார். ''இந்தக் கொரோனா, எதிரிகளுக்கு உயிரியலை எவ்வாறு ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்று புது யுக்திகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது. பிரிட்டனைப் பொறுத்தவரை தகவல்களைத் திருடுவது மட்டுமன்றி எங்களது கட்டமைப்பை, பொருளாதாரத்தை, ஜனநாயகத்தை சீர்குலைக்க உளவு பார்க்கிறார்கள்'' என்றும் மெக்கல்லம் தெரிவித்தார். தீவிரவாதம் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், ''இஸ்லாமிய தீவிரவாதம்தான் எங்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆனால் சமீபமாக வலதுசாரிகளின் தீவிரவாதமும் அதிகரித்து வருகிறது’’ என்றார்.
''இவர்கள் ஒருபக்கம் ஆராய்ச்சியாளர்களின் அறிவுசார் சொத்துகளை, தகவல்களைத் திருட முயற்சிக்கிறார்கள் என்றால் மற்றொரு பக்கம் அவர்களின் ஆராய்ச்சியின் நேர்மை குறித்து சந்தேகத்தைக் கிளப்பி குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்'' என்ற மெக்கல்லம் இறுதியாக, ''நாங்கள் தீவிரவாதத் தாக்குதலை எதிர்த்து ஓய்வில்லாமல் உழைத்து வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
- விபி