நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
36 பேர் தனிமைப்படுத்தட்டவர்கள் என்பதுடன், ஏனைய 227 பேர் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 784 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, பணப் புலக்கம் அதிகளவில் இடம்பெற்றமையே, பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணி பரவலுக்கு காரணமாக இருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எனவே, பணப் புலக்கம் தொடர்பில் பொதுமக்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேலியகொடை கொத்தணி தொடர்பில், ஹட்டன், பொகவந்தலாவை, கினிகத்ஹேன, பிட்டவல மற்றும் மஸ்கெலியா முதலான பகுதிகளை சேர்ந்த ஐந்து பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், ஹட்டன் - டிக்கோயா நகரசபை விடுத்த கோரிக்கைக்கு அமைய ஹட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் தலைவர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை, பிரதமர் அலுவலகம், அலரிமாளிகை மற்றும் விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் என்பனவற்றில் கடமையாற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவின் எந்தவொரு ஊழியருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக பரவிவரும் செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்றும் அறிக்கை ஒன்றின் மூலம் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்த வெளிப்புற பிரிவு ஒன்றின் அதிகாரி ஒருவரே கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிரதமர் பங்கேற்கும், வெளிப்புற நிகழ்வுகளுக்கான பூரண பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான தயார்படுத்தல்களின்போது மாத்திரம் பங்கேற்கும் குறித்த அதிகாரி, கடந்த 17ஆம் திகதி முதல் சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
இதேவேளை, தம்புளை மாநகர சபைக்கு சொந்தமான மீன் விற்பனை நிலையம் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் பேலியாகொடை மீன் சந்தையுடன் தொடர்யை பேணிய மிரிஹான காவல்நிலையத்தின் அதிகாரி ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுதியாகியுள்ளது.
மேலும், வெலிசறை பொருளாதார மத்திய நிலையத்தில் கருவாடு விற்பனையில் ஈடுபட்ட போப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கு அமைய வெலிசறை பொருளாதார மத்திய நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதேநேரம், அம்பாறை – சேனாநாயக்கபுர பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், அவருடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிற்றூழியர்கள் நான்கு பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து களுபோவில போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் வெளிநோயாளர் பிரிவு என்பன நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது.
பின்னர் குறித்த பகுதிகளில் தொற்று நீக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு சிகிச்சை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 89 பேர் இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 803 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 703 ஆக குறைவடைந்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 7 ஆயிரத்து 521 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.