சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபெக் பிராந்தியத்தில் சுமார் இரண்டு வாரங்களாக நீடித்த கடுமையான மோதலைத் தொடர்ந்து ஆர்மீனியாவிற்கும் அசர்பைஜானுக்கும் இடையில் ஒரு தற்காலிக போர்நிறுத்தம் தொடங்கியுள்ளது.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற 10 மணி நேர பேச்சுவார்த்தையின் பின்னர் போரை நிறுத்த ஆர்மீனியா-அசர்பைஜான் நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதன்போது சண்டையின்போது சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை பரிமாறிக்கொள்ளவும் முடிவு எட்டப்பட்டது.
எனினும் சனிக்கிழமை பிற்பகல் (08:00 GMT) முதல் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த சில நிமிடங்களிலேயே, இரு தரப்பினரும் ஒப்பந்தத்தை மீறியதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதன்படி ஆர்மீனியா குடியேற்றத்திற்குள் அசர்பைஜான் ஷெல் வீசியதாக ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியது, அதே நேரத்தில் நாகோர்னோ-கராபெக்கில் உள்ள ஆர்மீனியப் படைகள், சண்டையை நிறுத்திய ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அசேரி படைகள் ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கியதாகக் குற்றம் சாட்டின.
நீண்டகால மோதலின் பின்னர் செப்டெம்பர் 27 ஆம் திகதி இரு நாடுகளுக்கிடையிலான மோதல் மீண்டும் வெடித்தது.
இதனால் இரு தரப்பிலுமிருந்து நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
சர்வதேச சட்டத்தின் கீழ், நாகோர்னோ-கராபெக் அசர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட ஆர்மீனிய இனத்தவர்கள், அசர்பைஜான் ஆட்சியை நிராகரித்து, 1990 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஆர்மீனியாவின் ஆதரவுடன் தங்கள் சொந்த விவகாரங்களை நடத்தி வருகின்றனர்.
1994 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கிடையிலான சர்வதேச அளவில் தரகு யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு முன்னர் குறைந்தது 30,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூறாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.