பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எடுத்த நிலைப்பாடு தொடர்பாக குவைத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது:
குவைத்தில் பிரெஞ்சு தயாரிப்புகளை பல கடைகள் மற்றும் பொதுமக்கள் புறக்கணித்து வருகின்றனர். கடைகள் பல பிரெஞ்சு தயாரிப்புகளை கடையில் இருந்து அப்புறப்படுத்தி வரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. பிரான்சில் ஒரு கார்ட்டூனிஸ்ட் படுகொலை செய்யப்பட்டதில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எடுத்த நிலைப்பாடு தொடர்பாக குவைத்தில் இந்ந எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளது.
குவைத் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் பிரெஞ்சு தயாரிப்புகளை புறக்கணிக்கவும், பிரான்சில் இருந்து குவைத் தூதரை திரும்பப் பெறவும், அரபு மற்றும் இஸ்லாமிய உலகிற்கு ஆதரவாக வலுவான நிலைப்பாட்டை எடுக்கவும் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, சமூக ஊடகங்களில் கடந்த நாள் முதல் சிறப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. பிரான்சின் நிலைப்பாடு இஸ்லாமிய உலகிற்கு அவமானம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் பள்ளியில் கார்ட்டூன்களைக் காட்டிய சாமுவேல் பாட்டி என்ற ஆசிரியரின் கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது, இது இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் செயல் அல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், இஸ்லாமியத்திற்கு எதிரான தீவிரவாதம் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை அவர்கள் ஏற்கவில்லை என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
வரலாற்று ஆசிரியரான சாமுவேல் பாட்டி கடந்த வெள்ளிக்கிழமை பாரிஸிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு நகரத்தில் வைத்து தலை வெட்டி கொல்லப்பட்டார், முகமது நபியின் சித்திரம் எனக்கூறி சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக கொடூரமாக அவர் கொலை செய்யப்பட்டார் என பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.