Our Feeds


Tuesday, October 20, 2020

www.shortnews.lk

தலை ஒட்டிப் பிறந்த சபா, மர்வா இருவரும் பிரிந்த நிலையில் ஊர் வந்து சேர்ந்தனர் - 50 மணித்தியாள அருவை சிகிச்சை வெற்றி

 

சென்ற ஆண்டு பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தங்களது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பினர்.




சஃபா மற்றும் மார்வா பீபீ ஆகிய இருவரும் சுமார் 50 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற மூன்று வேறுபட்ட அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தாயார் ஜைனாப் பீபீ, தனது மகள்கள் சொந்த ஊருக்கு செல்வதை எண்ணி மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறினார்.

"எனது இரு மகள்களும் நலமுடன் இருக்கிறார்கள். மார்வாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவளுக்கு சிறிதளவு மட்டுமே உதவி தேவைப்படுகிறது" என்று அவர் கூறினார்.

"நாங்கள் சஃபாவையும் கண்காணித்து வருகிறோம். கடவுளின் ஆசியால் அவர்கள் இருவரும் விரைவில் நடப்பார்கள் என்று நம்புகிறேன்."

ஒன்று இரண்டானது.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்பது அரிதானது. இவர்களில் 20இல் ஒரு தொகுப்பினர் மட்டுமே தலைகள் இணைந்த நிலையில் ஒட்டிப்பிறக்கிறார்கள். இவர்கள் மருத்துவ ரீதியில் கிரானியோபாகஸ் இரட்டையர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். குறிப்பாக, இவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தை பருவத்தைத் தாண்டி உயிர் பிழைப்பதில்லை.

லண்டனிலுள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்களை 100 பேர் கொண்ட மருத்துவ குழு பராமரித்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர். அப்போது முதல் மருத்துவர்களின் ஆலோசனைப்படி, தங்களது தாய் மற்றும் மாமாவுடன் லண்டனில் இவர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களது மருத்துவ செலவு உள்பட அனைத்து செலவுகளுக்கும் தேவைப்பட்ட சுமார் பத்து கோடி ரூபாயை பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபரான முர்தாசா லக்கானி என்பவர் கொடுத்து உதவினார்.

தற்போது மூன்றரை வயதாகும் இரட்டையர்கள் இருவருக்கும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஏற்றவாறு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இருவருக்குமே கற்றல் குறைபாடு உள்ளது.


தனது மகள்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவ குழுவினரை ஹீரோக்கள் என்று பாராட்டும் ஜைனாப், பாகிஸ்தானில் வசிக்கும் தனது மற்ற ஏழு குழந்தைகள் இவர்கள் இருவரையும் பராமரிக்க ஆவலுடன் காத்திருப்பதாக கூறுகிறார்.

அறுவை சிகிச்சை குழுவின் தலைமை மருத்துவரான ஓவஸ் ஜீலானி, தான் உள்பட மருத்துவ குழுவினர் அனைவரும் இரட்டையர்களின் குடும்பத்திற்காக மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

ஆனால், அறுவை சிகிச்சையின் விளைவுகள் குறித்து அவர் குழப்பான நிலையிலேயே இருப்பதாக பிபிசியிடம் கூறினார்.

"மர்வா சிறப்பாக ஒத்துழைத்து உடல்நலம் தேறி வருகிறாள். ஒட்டுமொத்த குடும்பத்தையும் பார்க்கும்போது, நாங்கள் சரியான தேர்வைதான் மேற்கொண்டுள்ளோம். ஆனால், சஃபாவை ஒரு தனிப்பட்ட நபராக பார்க்கும்போது அப்படி தோன்றவில்லை" என்று கூறுகிறார்.

மிகுந்த அனுபவமிக்க நரம்பியல் மருத்துவரான ஜீலானி, அறுவை சிகிச்சையின்போது தானும் மற்ற மருத்துவ குழுவினரும் எடுக்க வேண்டிய சவாலான முடிவை எண்ணி கலங்குகிறார்கள்.

சவாலான முடிவு

இரட்டையர்களின் மூளை வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த ரத்த நாளங்கள் மட்டுமே இருந்தன. அறுவை சிகிச்சையின்போது இருவரில் ஒருவருக்கு மட்டுமே அதை அளிக்க முடியும் என்ற சவாலான சூழ்நிலை நிலவியது. இரட்டையர்களில் பலவீனமானவராக இருந்த மார்வாவுக்கு இவை வழங்கப்பட்டன.

இதன் விளைவாக சஃபாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் அவரது மூளையில் நிரந்தர சேதம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு நடப்பது என்பது வாழ்க்கை முழுவதும் இயலாத விடயமாக இருக்கக் கூடும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »