குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீன் தாக்கல் செய்த ரீட் மனுவை எதிர்வரும் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனு குமுதினி விக்ரமசிங்க மற்றும் யோசித ராஜகருணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.
மனுவின் பிரதிவாதிகளாக பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்பீ.ரணசிங்க, விசாரணைக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் காமினி உள்ளிட்ட எழுவர் பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து சென்றமையின் ஊடாக அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தம்மை கைது செய்ய தேடி வருவதாக மனுதாரரான பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீன் தனது மனுவின் ஊடாக நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தம்மை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவொன்றை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.