Our Feeds


Wednesday, October 14, 2020

www.shortnews.lk

புற்று நோயினால் இலங்கையில் வருடத்திற்கு 14 ஆயிரம் பேர் மரணம் - சுகாதார அமைச்சு

 



இலங்கையில் சராசரியாக வருடாந்தம் சுமார் 25,000 பேர் புற்றுநோயாளர்களாக அடையாளங்காணப்படும் அதேவேளை சுமார் 14,000 பேர் வருடாந்தம் புற்றுநோயினால் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


புற்றுநோயை முன்கூட்டியே இனங்காணல், அதற்கு முறையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளல், புற்றுநோய் வருவதைத் தடுக்கக்கூடிய வகையில் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் செயற்படல் உள்ளடங்கலாக மக்கள் மத்தியில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சினால் 'ஆயூ' என்ற சமூகவலைத்தளங்களின் மூலமான விழிப்புணர்வு செயற்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இரத்தவங்கியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.


இதன் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. 


இங்கு உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் குடித்தொகை நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ரிட்சு நக்கென் கூறியதாவது,


கொவிட் - 19 வைரஸ் என்ற ஒரு தொற்றுநோயின் மத்தியிலும் இவ்வாறானதொரு செயற்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு சுகாதார அமைச்சு மேற்கொண்டிருக்கும் முயற்சி பாராட்டப்பட வேண்டியதாகும். இதனூடாக கொரோனா வைரஸ் பரவலுக்கு மாத்திரமன்றி, முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய மேலும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர்கள் அவதானம் செலுத்தியுள்ளமை தெளிவாகின்றது.


புற்றுநோயை நாம் தொடர்ச்சியான பரிசோதனைகளை முன்னெடுப்பதன் ஊடாக ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்துகொள்ள முடியும். பின்னர் அதற்கான உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக அந்த நோயின் பிடியிலிருந்து முழுவதுமாக மீளமுடியும். எனினும் இதுபற்றி போதியளவான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லாமை ஒரு குறைபாடாகவே இருக்கிறது. அதனை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்த இணையப்பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சிறந்த விடயமாகும் என்றார்.


(நா. தனுஜா)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »