Our Feeds


Tuesday, October 6, 2020

www.shortnews.lk

மினுவங்கொட தொழிற்சாலை ஊழியர்கள் 139 பேருக்கு புதிதாக கொரோனா - 706 ஆக உயர்வு

 


 

திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 139 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

அதன் அடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் உட்பட மொத்தமாக 707 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கம்பஹா நிர்வாக மாவட்டத்தின் கம்பஹா பொலிஸ் எல்லை பகுதிக்குள் மீண்டும் அறிவிக்கும் வரையில் இன்று மாலை 6.00 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.

1897 ஆம் ஆண்டு இலக்கம் 03 இன் கீழான தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பதில் பொலிஸ் மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய 2020.10.06 மாலை 6.00 மணி தொடக்கம் அமுலில் உள்ள வகையில் மறு அறிவித்தல் வரையில் கீழ் கண்ட பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

 கம்பஹா நிர்வாக மாவட்டத்தில் கம்பஹா பொலிஸ் எல்லைப் பகுதி

 கீழ் குறிப்பிட்ட பொலிஸ் பிரிவுகளில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

01. திவுலப்பிட்டிய பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரிவு.
02. மினுவாங்கொட பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரிவு.
03. வேயாங்கொட பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரிவு.


தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட காலப்பகுதியில் அனைவரும் தமது வீடுகளில் இருக்க வேண்டும். இதேபோன்று தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் குறித்த பிரதேசத்திற்குள் பிரவேசித்தல், அதேபோன்று பிரதேசத்தில் இருந்து வெளியேறுதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்து பஸ்கள் இந்த பிரதேசத்தின் ஊடாக பயணிக்க முடிந்த போதிலும் இந்த பகுதிகளில் பஸ்களை நிறுத்துதல் மற்றும் பயணிகளை ஏற்றி இறக்குதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றுவதற்காகவோ அல்லது இறக்குவதற்காகவோ ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மினுவங்கொடை பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள கொவிட் 19 தொற்றாளர்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் மறு அறிவித்தல் வரை பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்காட்சிகள், கருத்தரங்குகள், விருந்துபசாரங்கள், உட்புற மற்றும் வெளிப்புற நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மதம் சார்ந்த ஊர்வலங்கள் உட்பட அனைத்து விதமான ஊர்வலங்களுக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, திவுலபிடிய, மினுவங்கொடை மற்றும் வெயாங்கொடை ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் பணி புரியும் ஊழியர்கள் தாம் தங்கியுள்ள இருப்பிடங்களிலேயே தொடர்ந்தும் இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலைகளின் நிர்வாகம் தமது ஊழியர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் செயற்பாட்டை தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதேபோல், மினுவங்கொடை Brandix தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இலங்கையின் எந்த பிரதேசத்தில் வசித்தாலும் வீடுகளை விட்டு வௌியேறாமல் தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேபோல், தற்போது கொவிட் 19 தொற்றுக்குள்ளான நபர்களின் குடும்ப உறுப்பினர்களை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு செல்ல தயாராக ​வேண்டும் என அரசாங்கம் தொற்றுக்குள்ளான நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »