Our Feeds


Thursday, October 22, 2020

www.shortnews.lk

13 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளது - Dr சுதத் சமரவீர

 



covid-19 தொற்றுக்குள்ளான நோயாளர்கள் சிலர் பேலியகொடை மீன் சந்தைக்கு வந்து சென்றதாக கிடைத்த தகவலின்படி குறித்த இடத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.


நோய் தொற்று பரவல் ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன்படி நேற்றைய தினத்தில் பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.

´இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட நோயாளர்கள் சிலர் பேலியகொடை மீன் சந்தைக்கு வந்து சென்றதாக தகவல் கிடைத்தது. அதன்படி குறித்த இடத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறித்த பிசிஆர் பரிசோதனை இன்றைய தினத்திலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி குறித்த முடிவுகள் இன்று அல்லது நாளை கிடைக்க உள்ளன. அதற்கமைவாக குறித்த இடத்தில் நோய்த்தொற்று பரவல் தொடர்பில் எமக்கு அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும். குறித்த இடத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து மீன் வர்த்தகர்கள் மீன்களை கொண்டு வருகின்றனர். அதேபோல் மீன்களை பெற்று சென்று விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக நோய்த்தொற்று பரவியிருந்தால் அது பல மாவட்டங்களில் பரவி இருக்கக்கூடும்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் மினுவாங்கொடை தொற்றாளர்கள் அதிகமாக கம்பஹா மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.

´ நோயாளர்கள் எமக்கு கம்பஹா மாவட்டத்தில் விசேடமாக பதிவாகின்றனர். எனினும் குருணாகலை, புத்தளம், கேகாலை, கண்டி, காலி, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய 13 மாவட்டங்களிலும் நோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். மீன் சந்தை நோயாளர்களின் பரவல் காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்´.

தற்போதைய நிலையில் நாடு பூராகவும் 4 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்றைய தினத்தில் மாத்திரம் 8000 பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »