கொவிட் தடுப்புக்காக சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள பரிந்துரைகளை சட்டமாக்கி வர்த்தமானியில் வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரு தினங்களில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக புதிய சட்டம், வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வௌியிடப்படும் எனவும், அதன்படி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்க நீதிமன்றத்திற்கு வாய்ப்பளிக்கப்படும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ´இந்நாட்டு மக்களின் சுகாதார நிலைமையை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நோய் தொற்று காணப்படும் பிரதேசங்களில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நான் எதிர்வரும் இரண்டு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளேன்.
குறித்த பிரதேசங்களில் முகக் கவசங்கள் அணியாதவர்களுக்கு, சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு, சில வளாகங்களில் நுழையும் போது உடல் வெப்பத்தை அளவீடு செய்ய இடமளிக்காத நபர்களுக்கு எதிராக குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் நோய் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள பிரதேசங்களில் குறித்த சுகாதார வழிகாட்டல்களை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை ஆகிய இரண்டு தண்டனையோ அல்லது ஒரு தண்டனையோ நீதி மன்றத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்