முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்ய சி.ஐ.டி. தேடியபோது, அவரை சட்டரீதியிலான கைதிலிருந்து தடுத்து மறைந்திருக்க, உதவியதாக கூறி கைது செய்யப்பட்ட களுபோவில பகுதியைச் சேர்ந்த விசேட பெண் வைத்திய நிபுணர், பொறியியலாளர், விரிவுரையாளர் உள்ளிட்ட 7 பேரையும் பிணையில் விடுவிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று (27) உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து, அவர்களை மேலும் விளக்கமறியலில் வைப்பது பிணைச் சட்டத்தின் நோக்கம் மற்றும் தாற்பரியங்களுக்கு முரணானதாக அமையும் என சுட்டிக்காட்டியே நீதிமன்றம் பிணையளித்தது. அதன்படி அந்த 7 பேரும் தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மொஹம்மட் பர்ஷான், மொஹம்மட் ரிஷாத், இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ், தமிஜ் அக்பர், பவுமுதீன், நூர் மசாஹிமா மற்றும் மொஹம்மட் மொயுனுதீன் ஆகியோரே பிணையில் விடுவிக்கப்பட்டவர்களாவர்.
இதனைவிட, ஏற்கனவே கைது செய்யப்பட்டு ரிஷாத் பதியுதீனின் பிரதான வழக்குடன் தொடர்புபடுத்தி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரியான, ரிஷாத் பதியுதீனின் மெய்பாதுகவலர் ரிழ்வானின் பெயர் அவ்வழக்கிலிருந்து நீக்கப்பட்டு, இந்த 7 சந்தேக நபர்கள் தொடர்பிலான வழக்கில் 8 ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், இது குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சி.ஐ.டி. சார்பில் பிரதான விசாரணை அதிகாரியான நிரோஷினி மேலதிக அறிக்கையுடன் நீதிமன்றில் ஆஜரானார். கொவிட் நிலைமை காரணமாக அறிக்கைகள் எதனையும் கைமாற்றுவதை தவிர்த்துள்ள நீதிமன்றம், மேலதிக விசாரணை அறிக்கையை மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது தொலைநகல் ஊடாகவோ தமக்கு அனுப்பி வைக்க சி.ஐ.டி.யை அறிவுறுத்தியது. அத்துடன் இது தொடர்பில் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றில் விடயங்களை முன்வைத்தார்.
‘பிரதான சந்தேக நபரான ரிஷாத் பதியுதீன் மறைந்திருக்க உதவியமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை. ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்படும்போது மறைந்திருந்த தெஹிவளை எபனிஸர் தொடர்மாடி குடியிருப்பு வீட்டின் உரிமையாளர் தொடர்ந்து மறைந்துள்ளார். அவரைக் கைது செய்யத் தேடி வருகிறோம். அத்துடன் ரிஷாத் பதியுதீனை கைது செய்ய அங்கு பொலிஸார் சென்றபோது, அவர் தனது அப்பிள் ரக தொலைபேசியை (ஐ போன்) அவர் மறைந்திருந்த 3 ஆம் மாடியிலிருந்து கீழே வீசியெறிந்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் இந்த விசாரணைகள் தொடர்கின்றன. மேலும் இந்த விவகாரத்தில் 4 சந்தேக நபர்களைக் கைது செய்ய வேண்டியுள்ளது.’ என அவர் தெரிவித்தார்.
இதன்போது, சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ரதிஸ்ஸ, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, சிரேஷ்ட சட்டத்தரணி ஆனல்ட் பிரியந்தன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
ஏற்கனவே, சந்தேக நபர்கள் தொடர்பில் பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா 4 ஆவது சந்தேக நபர் சார்பில் பிணை கோரிக்கை முன்வைத்தார்.
அனைத்து சந்தேக நபர்களுக்கும் எதிராக குற்றவியல் சட்டத்தின் 209, 213 ஆகிய பிரிவுகளின் கீழேயே குற்றம் சும்த்தப்பட்டுள்ள நிலையில் அவை பிணை வழங்க முடியுமான குற்றச்சாட்டுக்கள் என அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் விசாரணையாளர்கள் மேலும் சந்தேக நபர்களைக் கைது செய்ய இருப்பதாக கூறி, அதற்காக விளக்கமறியலில் உள்ளோரின் மறியல் காலத்தை நீடிக்கக் கோருவது நியாயமற்ற, சட்டத்துக்கு அப்பாற்பட்ட விடயம் என சுட்டிக்காட்டி, எந்தவொரு நிபந்தனையின் கீழும் பிணை வழங்குமாறு கோரினார்.
விடயங்களை ஆராய்ந்த நீதிவான் பிரியந்த லியனகே, ‘சந்தேக நபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பிணை வழங்க முடியுமானவை. பிணை வழங்குவதே சட்டம். பிணை வழங்க முடியுமான குற்றத்துக்கு பிணை வழங்க மறுக்க, பிணைச் சட்டத்தின் 14 ஆம் அத்தியாயத்தின் கீழ் குரிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் முன்வைக்கப்பட வேண்டும். அவற்றை உறுதி செய்வது முறைப்பாட்டாளர் தரப்பின் வேலையாகும்.
கடந்த தவணையின்போது மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக கூறப்பட்ட நிலையிலேயே விசாரணைக்கு கால அவகாசம் வழங்கி சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். எனினும் தற்போது மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.
மற்றொருவரைக் கைது செய்வதற்காக விளக்கமறியலில் உள்ளவர்களின் காலத்தை நீடிப்பது அநீதியானது. அது பிணைச் சட்டத்தின் நோக்கம், தாற்பரியங்களி மீறுவதாக அமையும்.
சந்தேக நபர்க்ளின் பிணையை மறுக்க எந்த காரணிகளும் இல்லாத நிலையில், அவர்கள் அனைவரையும் தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கிறேன்.’ என நீதிவான் அறிவித்து, வழக்கை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.