நியூசிலாந்து பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னின் தொழிலாளர் கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. இதன் மூலம் இரண்டாவது முறையாக அவர் பிரதமராகப் பதவியேற்கவிருக்கிறார்.
நியூசிலாந்து பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்தநிலையில், மொத்த வாக்குகளில் 70 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில், ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி 49 சதவிகித வாக்குகளையும், கூட்டணிக் கட்சியாக கிரீன் கட்சி 7.6 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.
இதன் மூலம், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகளை ஜெசிந்தாவின் கட்சி பெற்றிருக்கிறது. தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாக இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், ஜெசிந்தாவின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது. வெளிநாடுவாழ் நியூசிலாந்து மக்களின் வாக்குகள், தபால் வாக்குகள் ஆகியவை எண்ணப்பட்டு அதிகாரபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும்.
எதிர்க்கட்சியான தேசியக் கட்சியின் சார்பில் ஜெசிந்தாவுக்கு எதிராகக் களமிறங்கிய ஜூடித் காலின்ஸ், இதை உறுதி செய்திருக்கிறார். தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கும் அவர், ஜெசிந்தாவுக்கு போனில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது குறித்துப் பேசிய ஜூடித், ``பிரதமர் ஜெசிந்தாவுக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்தேன். தொழிலாளர் கட்சிக்கு இந்தத் தேர்தலில் சிறப்பான வெற்றி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்’’ என்றார். எதிர்க்கட்சியான தேசியக் கட்சிக்கு 27 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. 84 ஆண்டுக்கால நியூசிலாந்தின் தேர்தல் வரலாற்றில் எதிர்க்கட்சி பெற்ற குறைவான வாக்கு சதவிகிதம் இதுதான் என்கிறார்கள் அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள்.
தேர்தலுக்குப் பின்னர் ஆக்லாந்தில், தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஜெசிந்தா, ``நாம் ஒவ்வொரு நியூசிலாந்து குடிமகனுக்காகவும் ஆட்சி புரிவோம். இன்றைய தேர்தல் முடிவுகள் வலிமையானவை. தொழிலாளர் கட்சி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும். என்மீதும் இந்த அரசு மீதும் நம்பிக்கைகொண்டு வாக்களித்த ஒவ்வொரு வாக்காளருக்கும் நன்றி’’ என்று கூறினார். நியூசிலாந்து பிரதமராக ஜெசிந்தா, கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றார். தற்போது இரண்டாவது முறையாக அசர் தேர்தலில் வென்றிருக்கிறார்.
கொரோனாவுக்கு எதிரான போரில் நியூசிலாந்து அரசின் நடவடிக்கைகள் உலக அளவில் பாரட்டப்பட்டன. கொரோனா பரவல் தொடங்கியபோது மார்ச்சில் எல்லைகளை மூடிய ஜெசிந்தா அரசு, கடுமையான விதிகளுடனான ஊரடங்கையும் நியூசிலாந்தில் அமல்படுத்தியது. இதனால், அந்நாட்டில் இதுவரை 1,883 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் நியூசிலாந்தின் இறப்பு எண்ணிக்கை 25 மட்டுமே.
விகடன்