Our Feeds


Tuesday, September 15, 2020

www.shortnews.lk

தென்கொரியாவின் பிரபல youtube பதிவாளர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்

 



தென் கொரியாவில் வசித்துவரும் தென்னாபிரிக்க யூடியூப் பதிவாளர் ஒருவர் இரண்டு வருட ஆய்வின் பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்லாம் தொடர்பான காணொளிகளைப் பார்வையிட்டு வருகின்றேன் என லவாசி சுபு தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக, எனது சொந்தத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முடிவை எடுத்தேன், மேலும் எனது பயணத்தால் அதிகமானோர் ஈர்க்கப்பட்டிருப்பதும், சிலர் இஸ்லாத்தில் இணைந்து கொள்வதும் எனது மனதைக் கவர்ந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லவாசி சுபு, தனது இஸ்லாத்தைத் தழுவும் தீர்மானத்தை கடந்த செப்டம்பர் 1 ஆம் திகதி பதிவிட்ட காணொளி மூலம் அறிவித்தார்.

இஸ்லாம் தொடர்பான காணொளிகளைப் பார்வையிடும்போதெல்லாம் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படுவதை உணர்ந்தேன். அதனால் இஸ்லாம் அமைதியும் மனிதாபிமானமும் கொண்ட மார்க்கம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது என சியோலில் அமைந்துள்ள அன்சான் பள்ளிவாயல் மற்றும் இஸ்லாமிய மத்திய நிலையத்தில் ஷஹாதா கலிமாவை மொழிந்த பின்னர் குறிப்பிட்டுள்ளார்.

எனது காணொளிகள் மூலம் மக்களை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கும் ஏனைய கலாசாரங்களையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் தொடர்ந்து கற்றுக்கொள்ளவும் ஆராயவும் விரும்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு அவரைப் பின்தொடர்வோரிடையே அபரிமிதமான ஆதரவைப் பெற்றுள்ளது. அவர்களுள் முக்கியமானவராக ஸிம்பாப்வேயில் பிறந்து வளர்ந்த உலகளவில் பிரபலமான முன்னணி இஸ்லாமிய அறிஞரான முப்தி மெங்க் காணப்படுகின்றார்.

உங்களுக்கும் உங்களது அன்புக்குரியவர்களுக்கும் எல்லாம்வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக, மாஷா அல்லாஹ், தபாரகல்லாஹ், அல்லாஹ்வின் தீனுக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும் என தனது பின்னூட்டத்தில் முப்தி மெங்க் குறிப்பிட்டுள்ளார்.

லவாசி சுபு இஸ்லாத்தைத் தழுவியமை இந்த ஆண்டு மற்றுமொரு யூடியூப் பதிவாளர் தழுவலையடுத்து இடம்பற்றுள்ள சம்பவமாகும்.

இவ்வாண்டு பிரித்தானியாவைச் சேர்ந்த இளம் பிரித்தானிய யூடியூப் பதிவாளரான ஜே பால்ப்ரே ஆகஸ்ட் மாதம் இஸ்லாத்தைத் தழுவினார். ‘பல ஆண்டுகளாக ஆன்மீகத் தேடலினால் கண்டுபிடிக்கப்பட்ட மிக ஆழமான பாதை’ என அதனை அவர் விபரித்திருந்தார். அமெரிக்க யூடியூப் பதிவாளரான வட்டவ்வா என்பவரும் கடந்த மாதம் இஸ்லாத்தைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


 எம்.ஐ.அப்துல் நஸார்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »