தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா பாராளுமன்றத்திற்கு அணிந்து வந்த ஆடை காரணமாக பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டாலும் ஆளும் தரப்பினர் அவருக்கு ஆதரவாக திரண்டார்கள். இது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ, அதாவுல்லா எம்.பியுடன் இது பற்றி தெளிவுபடுத்தியதையடுத்து அவர் சபையில் இருந்து வெளியில் சென்றார்.
20ஆவது திருத்தம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில், பாராளுமன்றத்திற்குள் நுழைந்த ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் எம்.பி. அணிந்திருந்த ஆடை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி நளின் பண்டார ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்தார்.
அதாவுல்லாஹ் எம்பி அணிந்து வந்துள்ள ஆடை எவ்வகையானது. இவற்றை அணிய முடியாது என்றார்.
ஆனால் அது அவரின் பாரம்பரிய உடை என சபாநாயகர் கூறிய போதும் எதிரணியில் சிலர் தொடர்ந்து கோசமெழுப்பினர். இதன் போது ஆளும் தரப்பு எம்.பிகள் சிலர் அதாவுல்லா எம்.பியை சற்றி நின்று இதுபற்றி அவருடன் உரையாடினார்கள்.
இந்த நிலையில் ஏ.எல்.எம். அதாவுல்லா எம்.பி ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து, தற்போது 20 ஆவது திருத்தமா எனது உடையா பிரச்சினையா என விளக்கமளிக்க முற்பட்டார்.
இந்த நிலையில் உரிய முறையிலேயே ஆடையை அணிந்துள்ளதாக சபாநாயகர், தெரிவித்தார்.
அடுத்து எஸ்.எம் மரிக்கார் எம்.பி ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்தார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அணியும் ஆடையை அதாவுல்லாஹ் எம்.பி. அணிந்து வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஒரு நாடு ஒரு சட்டம் என்று கூறியவாறு இவ்வாறு ஆடையணிய அனுமதித்துள்ளதாக ஹரீன் பெனாண்டோ எம்.பி கேள்வி எழுப்பினார்.
ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வுடன் படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ கலந்துரையாடியதையடுத்து அவர் சபையில் இருந்து சிறிது நேரத்தில் வெளியேறினார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ,
முன்அனுமதி பெறாமல் இந்த ஆடையை அணிந்து வந்ததால் அவரை சபையில் இருந்து வெளியில் அனுப்ப நேரிட்டது. முன்அனுமதி பெற்று இவ்வாறான ஆடை அணிய முடியும். இதற்கு முன்னரும் வேறு விதமான ஆடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொப்பி முஹைதீன், அஞ்சான் உம்மா எம்.பி ஆகியோருக்கு அவர்களின் கலாச்சார ஆடைகளான தொப்பி, தலையை மறைக்கும் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் தொண்டமானும் இவ்வாறு ஒரு தடவை நிற ஆடை அணிய அனுமதி கோரிய போது அனுமதி வழங்கப்பட்டாலும் அவர் அன்றைய தினம் பாராளுமன்றம் வரவில்லை. தங்கேஸ்வரி எம்.பியும் வேறு வகை ஆடை அணிய அனுமதி கேட்டு ஒரு தடவை அனுமதி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உரிய அனுமதியை சமர்ப்பித்த அதாவுல்லாஹ் எம்.பி. இன்று மாத்திரம் குறித்த ஆடையை அணிய அனுமதி கோரியதைத் தொடர்ந்து, அதாவுல்லா எம்.பிக்கு சபாநாயகர் உரிய அனுமதியை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் அவை அமர்வுகளில் மீண்டும் கலந்து கொண்டார்.
ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், இது தொடரபில் சபாநாயகரின் அனுமதியை கோரினால் தொடர்ந்தும் குறித்த ஆடையை அணிய முடியும் என்று படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ கூறினார். (பா)
(பாராளுமன்றத்திலிருந்து எம்.எஸ். பாஹிம்)