மட்டக்களப்பு – செங்கலடி – பண்குடாவில் உள்ள தொல்பொருள் சிறப்புரிமை மிக்க பகுதியில் வைத்து, தம்மை தாக்கியதாக தெரிவித்து, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூன்று பேர், அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான தமது திணைக்கள அதிகாரிகள், கரடியனாறு மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்களத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்ப பிரதேசங்களுக்கு பொறுப்பான உதவி பணிப்பாளர் டீ.ஜீ. பிரியந்த எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
பண்குடா பகுதியில் தொல்பொருள் சிறப்புரிமை மிக்க பகுதிகள் உரிய முறையில் எல்லையிடப்படவில்லை என அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த இடத்திற்கு சென்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை விமர்சித்து, தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.