கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவரை ஆம்புலன்ஸ் சாரதி
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை இரவு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இரு பெண்களில் ஒருவர் உள்ளூர் கொரோனாவுக்கான விசேட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மற்ற பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் வேறொரு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் ஆம்புலன்ஸ் சாரதிக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
சாரதியுடன் தனிமையில் பயணித்த குறித்த 19 வயது பெண்ணை ஓட்டுநர், பாழடைந்த இடத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தி, வாகனத்திற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இதை யாரிடமாவது கூறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் அவரை ஆம்புலன்ஸ் சாரதி அச்சறுத்தியுள்ளார். எனினும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்த சம்பவம் குறித்து வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது.
அதிரடியாக செயற்பட்ட பொலிஸார் கயம்குளம் தெற்கு, பனக்கச்சிராய் பொது மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் சாரதியான 29 வயது நவுபுால் என்பவரை இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் கொலை முயற்சி உட்பட பல குற்றங்களுக்காக வழக்குகளுடன் தொடர்புடையவர் என்று போலிஸார் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.
குறித்த சாரதி தற்காலிக அடிப்படையில் இவர் பணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவருக்கு வேலை கிடைத்தது குறித்து விசாரித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், வீடியோ கான்பெரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கேரளா போலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கேரளாவில் ஒவ்வொரு ஆம்புலன்சிலும் குறைந்தது இரண்டு ஊழியர்கள் இருக்க வேண்டும் என்றும், பெண் நோயாளிகள் ஏற்றிச்செல்லப்படும் வாகனங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அனைத்து சாரதிகளினதும் பின்புலம் குறித்து ஆராய கேரள பொலிஸாருக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.