Notes : பசுக்களை தெய்வமாக போற்றும் இந்தியாவின் சில மாநிலங்களில் மட்டுமே மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதற்கு தடை உள்ளது. ஆனால் உலகில் இறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.
-சிவலிங்கம்
சிவகுமாரன்
இலங்கையில் இறைச்சிக்காக மாடுகள் அறுப்பதை தடை செய்ய வேண்டும் என ஆளுங்கட்சி
கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கொண்டு வந்த
தீர்மானத்தை கட்சியின் உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளனர் என்றும் தேவை ஏற்படின்
மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கு ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கலாம் என பிரதமர்
தெரிவித்ததாக வெளிவந்த செய்திகள் குறிப்பிட்ட ஒரு இனத்தை மட்டும் பாதிக்கவில்லை
என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஏனெனில் மாட்டிறைச்சியை இலங்கையில் அதிகமாக உண்பவர்கள்
சிறு தொகையினரான முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களா
?அல்லது பெரும்பான்மையினராக இருக்கக் கூடிய பெளத்த சிங்களவர்களா என்ற கேள்வி
இந்த விவாதத்துக்கு தேவையற்றது.
மேலும் இலங்கையில் கால்நடைகளை வளர்ப்பவர்கள்
அனைவரும் இறைச்சிக்காக மட்டுமன்றி விவசாய தேவைக்கும்,
பாலுணவு சார்ந்த உற்பத்திக்கும் ஏனைய விடயங்களுக்கும் இத்தொழிலில்
ஈடுபட்டுள்ளனர். பசுவதையை தடுக்க வேண்டும் என்பதே இன்று பிரதான கோரிக்கையாக
உள்ளது. அப்படியானால் பால் தருவதை நிறுத்தி விட்டு இனப்பெருக்கம் மற்றும் விவசாய
செயற்பாடுகள் எதற்கும் ஒத்துவராத வயது போன பசுக்களை இலங்கையில் என்ன செய்கின்றனர்
என்ற கேள்வியும் எழுகிறது. அது குறித்த
ஆராய்ச்சிகளையும் எத்தனை அரசாங்கங்கள் கடந்த காலங்களில் முன்னெடுத்திருக்கின்றன?
பசுக்களையும் கன்றுகளையும் இறைச்சிக்காக கொல்லக் கூடாது என்பதை பிரதமர் மஹிந்த
இராஜபக்ச தான் கூற வேண்டும் என்பதில்லை. இலங்கையில் 1958
ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விலங்குகள் சட்டத்தில் (Animals
Act, No. 29 of 1958) பசுக்களையும் கன்றுகளையும்
கொல்வதற்கு தடை உள்ளது. அதே வேளை எவ்வகையான மாடுகளை இறைச்சிக்கு அறுக்கலாம் அது
தொடர்பான செயற்பாடுகள் என்ன என்பதை இறைச்சி அல்லது கசாப்பு கடை கட்டளைகள் சட்டம் .
( Butchers Ordinance ) கூறுகிறது
விலங்குகள் சட்டத்தில் பசு மற்றும் பசுக்கன்றுகளை கொல்வதற்கு தடை உள்ளது.
ஆனால் இறைச்சிக்காக இறக்குமதி செய்யப்பட்ட பசுவைத் தவிர என்ற வாசகம் அதில் உள்ளது.
அப்படியும் இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதாக இருந்தால்,
1) 12 வயதுக்கு குறையாததாக இருத்தல்
2) இனப்பெருக்கம் செய்ய முடியாததாக இருத்தல்
3) எந்த ஒரு விவசாய நோக்கத்துக்கும் பயன்படுத்த முடியாததாக இருத்தல் அவசியம்.
மட்டுமன்றி இவை அனைத்தையும் உறுதிபடுத்தி சான்றளிக்கக் கூடிய அதிகாரம்
முக்கியம். அந்த பொருத்தமான அதிகாரத்தை கொண்டிருப்பவர் அரசாங்க கால்நடை மருத்துவ
அதிகாரியாகவே விளங்குகிறார்.
ஆகவே எமது நாட்டின் சட்டத்தின் படி பசுக்களையோ கன்றுகளையோ கொல்ல முடியாது.
ஆனால் சட்டத்தை மீறும் வகையில் ஆங்காங்கே சில
சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. ஆனால் பிரதமர் கூறியிருக்கும் விடயம் முற்றிலும்
மாறுபட்டது. இலங்கையில் கிராமப்புறங்களில் அதிகமாக மாடுகளை வளர்ப்பவர்கள்
விற்பவர்களாக பெரும்பான்மையினத்தவர்களே இருக்கின்றனர்.
உழைத்து வயது போன கால்நடைகளை வைத்துக்கொண்டிருப்பதை விட அவற்றை விற்று விட்டு
இளம் கால்நடைகளை வாங்குவதென்பது இயல்பானதொன்று. எனினும் வயது போன கால்நடைகள் எங்கு
கொண்டு செல்லப்படுகின்றன என்பது ஒன்றும் இரகசியமல்ல.
அதை தடுப்பதற்கு எந்த அரசாங்கங்களாலும் முயற்சிகள் முன்னெடுக்க முடியாது.
அப்படியானால் அவற்றை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். இது நடைமுறைக்கு
சாத்தியமாகுமா?
தீக்குளித்த பெளத்த தேரர்
இந்நிலையில் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் பசுக்களையோ
மாடுகளையோ இறைச்சிக்காக அறுப்பதை தடை செய்யக்கோரி பல ஆர்ப்பாட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் உச்ச கட்டமாக 2013 ஆம் ஆண்டு
பசுவதையை தடுக்கக் கோரி போகாவத்த இந்திரரட்ன தேரர் என்ற பெளத்த பிக்கு தலதா
மாளிகையின் முன்பாக தீக்குளித்தார். பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்
உயிரிழந்தார்.
இது இலங்கை வாழ் பெளத்தர்கள்
மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில்
பெளத்த பிக்குகளும் பெளத்தவாத சிந்தனையோடு வலம் வரக்கூடிய அரசியல் பிரமுகர்களும்
இந்த விவகாரத்தை அரசியல்மயப்படுத்த முனைந்தனர்.
இலங்கை ஒரு பெளத்த நாடு என்பதால் இங்கு உயிர்களை கொல்ல முடியாது என்பதே
அவர்களின் வாதமாக இருந்தது. பெளத்தத்தில் பஞ்சசீல
கொள்கைகளில் முதலாவதாக கூறப்படுவது என்னவெனில் , ‘ஓருயிரையும்
கொல்லாமலும் தீங்கு செய்யாமலும் இருத்தலோடு அவற்றினிடம் அன்பாக இருத்தல்’
என்பதாகும். இங்கு உயிர்கள் என்றால் விலங்குகள் மனிதர்கள் அனைவரையுமே
குறிக்கின்றது என்பது முக்கிய விடயம்.
எனினும் இன்று இலங்கையில் இறைச்சிக்காக மாடுகள் மட்டும் அறுக்கப்படுவதில்லை
என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வர். பிரதமர்
மஹிந்த முன்வைத்த விடயங்கள் இறுதியானவை அல்ல என்பது முக்கிய விடயம். எனினும் இந்த
தொழிற்றுறையோடு இணைந்திருப்பவர்கள் மற்றும் மாட்டிறைச்சியை
உணவாக உட்கொள்பவர்களின் உணர்வுகளை தூண்டும் ஒரு செயற்பாடாக இது அமைந்து விட்டது.
மாட்டிறைச்சி கடைகளை அதிகமாக நடத்திச்
செல்பவர்கள் முஸ்லிம்கள் என்பது முக்கிய விடயம். அதை அரசாங்க சட்ட திட்டங்களுக்கு
ஏற்ப அனுமதி பத்திரம் பெற்றே அவர்கள் முன்னெடுக்கின்றனர்.
இந்த இறைச்சி கடைகள் மூலம் உள்ளூராட்சி சபைகளுக்கு வருடந்தோறும் கோடிக்கணக்கா
ரூபாய் வருமானம் கிடைப்பதை மறுக்க முடியாது. ஒரு வேளை பிரதமர் கூறுவது போன்று
மாடுகள் அறுப்பதை நிறுத்தி விட்டு இறைச்சியை இறக்குமதி செய்தால் அந்த இறக்குமதி
செலவீனம் குறைவாக இருக்குமா? அல்லது
இத்தனை வருடங்களாக இறைச்சி கடைகளின் மூலம் வருமானம் பெற்று வரும் உள்ளூராட்சி
சபைகளுக்கு அதற்கு ஈடான வருமானத்தை அரசாங்கத்துக்கு வழங்க முடியுமா என்று
சிந்திக்க வேண்டும்.
அதைவிட கட்டாக்காலி மாடுகளின் பெருக்கம் வயது போன மாடுகளை விற்க முடியாமை,
கால்நடை வளர்ப்பை ஜீவனோபாயமாக செய்து வருபர்களினதும்
பாலுற்பத்தி சார்ந்த வர்த்தகமும் எவ்வாறான நிலையை நோக்கிச்செல்லும் போன்ற
விடயங்கள் சவாலாக நிற்கின்றன. மேலும் மிருக காட்சிசாலைகளில் இறைச்சியை உணவாக
உட்கொள்ளும் விலங்குகளுக்கும் மற்றும்
மாட்டிறைச்சியை உணவாகப் பயன்படுத்தும் ஹோட்டல்கள் அனைத்துக்குமே இறக்குமதி
செய்யப்படும் இறைச்சியை விநியோகிப்பதென்பது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது
தெரியவில்லை.
இந்தியாவை திருப்திபடுத்தவா?
பிரதமரின் இந்த யோசனை செய்தி வடிவமாக மாறிய பின்னர் இது தொடர்பான இந்திய
பிரதமர் மோடியின் கொள்கைகளை ஒப்பிட்டும் சிலர் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர்.
ஏனெனில் மதவாத கட்சியான பா. ஜ. க வின் கொள்கையும் இந்தியாவில் மாடுகளை அறுப்பதற்கு
தடை விதிக்க வேண்டும் என்பதாகும். ஆனால் மறுபக்கம் எருமை இறைச்சியை ஏற்றுமதி செய்வதில்
உலகில் முன்னணியில் இருக்கும் நாடு இந்தியா என்பது பலருக்குத் தெரியாது.
அதிகளவான இந்துக்கள் வாழ்ந்து வரும் நாடாக இந்தியா விளங்குவதாலும் பல
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இவை வழிபாட்டிற்குரிய விலங்குகளாக விளங்கி
வந்ததாலும் அங்கு பசுவதை தடைச்சட்டம் சில
மாநிலங்களில் உள்ளது. மகாராஷ்டிரா
,குஜ்ராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம்
ஆகிய மாநிலங்களில் பசு,எருமை,
காளைகளை கொல்ல முடியாது . அதே .போன்று தமிழ் நாடு உட்பட ஆந்திரா,
உத்தர பிரதேசம், பீகார்,
மத்திய பிரதேசம் ,ஒடிசா ஆகிய
மாநிலங்களில் பசுவைத் தவிர ஒட்டகம், எருது
போன்றவற்றை இறைச்சிக்காக கொல்லலாம்.
அதே வேளை ,கேரளா, மேற்கு
வங்காளம், மணிப்பூர் ,திரிபுரா
போன்ற மாநிலங்களில் மாநில அரசாங்கங்களின் அனுமதியின்றியே அனைத்து கால்நடைகளையும்
இறைச்சிக்காக கொல்லலாம் என்பது முக்கிய விடயம்.
வருடந்தோறும் இந்தியா ஏற்றுமதி செய்யும் எருமை இறைச்சியை அதிகளவு இறக்குமதி
செய்யும் நாடுகளாக வியட்நாம், மலேசியா ,எகிப்து, இந்தோனேசியா,
சவூதி போன்றன விளங்குகின்றன. இலங்கையில் மாடுகள் அறுக்கப்படுவது தடை
செய்யப்பட்டால் இந்தியாவிடமிருந்தே இலங்கை மாட்டிறைச்சியை இறக்குமதி செய்ய
வேண்டியேற்படும் என்பதை சொல்லத்தான் வேண்டுமா?
எந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்பதில் மனிதர்களை கட்டுப்படுத்த முடியாது. உணவு
என்பது மனிதர்களின் சுதந்திரம் சார்ந்த விடயமாகும். அதில் கட்டுப்பாடுகளை விதிக்க
முடியாது.
மாடுகள் அறுப்பதை தடை செய்ய வேண்டும் என்ற பிரதமரின் கருத்தை ஆளுங்கட்சி உறுப்பினர்கள்
அங்கீகரித்திருந்தாலும் கூட இந்த விடயம் நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்பது
தெரியவில்லை. அந்த வகையில் இறைச்சி உணவுகளை உண்போருக்கு எதிரான ஒரு தாக்குதலாக இது
சமூக ஊடகங்களில் உருவெடுத்துள்ளதையும் எவ்வகையிலும் ஏற்க முடியாது என்றே கூற
வேண்டியுள்ளது.