20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெஜ்லட் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய இலங்கைக்கான உதவி வதிவிட பிரதிநிதி தயாணி மெண்டிஸ் இதற்கு எதிரான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
நேற்று (16) உரையாற்றிய அவர், மிச்சேல் பெஜ்லட் தன்னிச்சையாகவும் அனுமான ரீதியாகவும் உரையாற்றியதாக தெரிவித்தார்.
மேலும் உத்தேச 20 ஆவது திருத்தச்சட்ட மூலம் தொடர்பில் ஜனநாயக ரீதியாக கலந்துரையாடவும் விவாதம் புரியவும் வாய்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசியலமைப்பின் அதிகாரங்கள் மற்றும் விதிகளுக்கு அமைய முன்னாள் இராணுவ வீரர்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படுவதாக இலங்கை அரசாங்கம் சார்பில் கூற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
´அரச நிறுவனங்கள் பலவற்றுக்கு சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளமை தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதனை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கின்றது. இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தியுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு போன்ற உள்நாட்டு விசாரணைகளின் மூலம் போர் குற்றங்கள் தொடர்பில் இராணுவத்தினருக்கு எதிராக எந்தவித போதுமான சாட்சியங்களும் இல்லை.´ என இலங்கைக்கான உதவி வதிவிட பிரதநிதி தயாணி மெண்டிஸ் கூறினார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மனித உரிமை ஆணைக்குழு போன்ற பிரதான சுயாதீன நிறுவனங்களுக்கு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெஜ்லட் கடந்த 14 ஆம்; ஆரம்பமான 45 ஆவது கூட்டத் தொடரில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளை அச்சுறுத்துதல் மற்றும் அவர்களை சோதனையிடுவதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.