Our Feeds


Tuesday, September 29, 2020

www.shortnews.lk

அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன் - பிரதமர் மஹிந்த திட்டவட்டம்

 



அரசியலில் இருந்து தான் ஓய்வுப் பெற போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின் செய்தி பணிப்பாளர்களுடன் அலரி மாளிகையில் இன்று (29) இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஊடகவியலாளர்: பிரதமர் அரசியலிலிருந்து ஓய்வு பெற போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

பிரதமர்: அரசியல்வாதிகள் எக்காலத்தில் ஓய்வு பெற்றனர்? நான் ஓய்வு பெற போவதில்லை.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற இடமளிக்க போவதில்லை என்று ஒரு தரப்பு கூறும்போது, 20இற்கு 20 எடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.

பிரதமர்: எங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மக்கள் வழங்கியுள்ளனர். கட்சிகளுக்கும், தனி நபர்களுக்கும் வேறுபட்ட கருத்துக்கள் காணப்பட கூடும். எமக்கு நிலையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகின்றது. அதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை.

ஊடகவியலாளர்: கொவிட்-19 காரணமாக உலகின் அனைத்து நாடுகளினதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது? வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியுமா?

பிரதமர்: உள்நாட்டு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். அதற்கு உள்நாட்டு தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுத்து வருகிறது. நாம் என்ன இடம்பெற்றாலும் உரிய நேரத்திற்கு கடன்களை செலுத்தியுள்ளோம்.

ஊடகவியலாளர்: தேங்கள் குறித்து ஒரு பாரிய பிரச்சினை காணப்படுகிறது.

பிரதமர்: தேங்காய் தொடர்பில் எப்போதும் இவ்வாறானதொரு நிலை காணப்பட்டது. எமக்கு நுகர்வோர் முக்கியம். அதனால் கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான முன்மொழிவு சிறப்பானதாகும். அதனை முறைப்படி அமைச்சரவையில் முன்வைப்போம்.

ஊடகவியலாளர்: அரசாங்கம் வர்த்தமானி வெளியிடுகிறது. பின்னர் மீண்டும் திரும்பப் பெற்று கொள்கிறது என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது.

பிரதமர்: அதன் மூலம் வெளிப்படுவது ஜனநாயகமே தவிர வேறொன்றும் இல்லை. தேங்காய் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அது குறித்து அறிவிப்பேன்.

ஊடகவியலாளர்: மஞ்சள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை மஞ்சளை இறக்குமதி செய்ய முடியாதா?

பிரதமர்: உள்ளூர் விவசாயிகள் தற்போது மஞ்சளை பயிரிட ஆரம்பித்துள்ளனர். அவர்களை எம்மால் அதைரியப்படுத்த முடியாது. அதனால் உள்நாட்டு மஞ்சள் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளை தைரியப்படுத்த வேண்டுமாயின் நாம் இந்த நிலைமைக்கு முகங்கொடுத்து முன்னோக்கி செல்ல வேண்டும். வெளிநாடுகளிலிருந்து மீண்டும் நாம் மஞ்சள் இறக்குமதி செய்தால் விவசாயிகள் மஞ்சள் பயிர்செய்கையை கைவிட்டுவிடுவார்கள் என்றார்.

குறித்த சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தொழிற்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »