மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய கிராம சேவகர் ஒருவர் நேற்று (29) இரவு சிலாவத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,
முத்தரிப்பு துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆவணம் ஒன்றை கிராம சேவகரிடம் கோரியிருந்த நிலையில் குறித்த கிராம சேவகர் பிரதேச செயலகத்தில் நாளைய தினம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்ணை கஷ்டப்படுத்த கூடாது என்பதற்கான தான் வீட்டிலேயே கொண்டு வந்து தருவதாக தெரிவித்ததுடன் ஆவணத்துடன் முத்தம் ஒன்றும் தருவதாக தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை உடனடியாக முசலி பொலிஸாருக்கு பெண் கொண்டு சென்றதை தொடர்ந்து குறித்த கிராம சேவையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முத்தரிப்பு துறை மேற்கு கிராம அலுவலராக கடமையாற்றும் கிராம அலுவலகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கிராம அலுவலர் ஆவணம் ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக பாலியல் இலஞ்சம் கோரியதாக மனித உரிமை ஆணைக்குழு, மற்றும் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து நேற்று மாலை சிலாவத்துறை பொலிசாரால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை சிலாவத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-மன்னார் நிருபர் லெம்பட்-