சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கணிப்பொறி வன்பொருட்கள், ஆடைகள் மற்றும் பிற சரக்குகளை அமெரிக்காவுக்குள் கொண்டுவர அனுமதிக்க வேண்டாம் என்று எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஷின்ஜியாங் மாகாணத்தில் இருக்கும் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து சீன அரசுக்கு டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அளித்துவரும் அழுத்தங்களில் சமீபத்திய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.
ஷின்ஜியாங் மாகாணத்தின் தயாரிக்கப்படும் பொருட்கள் சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவர்களின் உழைப்பால் உருவானது என்பதால் தடை செய்யப்படுவதாக அமெரிக்கா கூறுகிறது.
நாட்டின் பாதுகாப்பு காரணங்களைக் கூறி 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீகர் இன முஸ்லிம்களை ஷின்ஜியாங் மாகாணத்தில் சீனா தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளதாக கருதப்படுகிறது.
இந்த விவகாரத்தில் சீனா மனித உரிமை மீறல்களை தொடர்ந்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
முறையற்ற, மனிதாபிமானமற்ற மற்றும் சுரண்டல் முறைகளை உள்ளடக்கிய உழைப்பு மூலம் உருவான பொருட்களை அமெரிக்க விநியோகச் சங்கிலியில் நுழைவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
உலகின் பருத்தி உற்பத்தியில் சீனாவின் பங்கு சுமார் 20 சதவிகிதம். அதில் பெரும்பாலானவை ஷின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுபவை.
சீன தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பெட்ரோகெமிக்கல் மற்றும் பிற மூலப்பொருட்கள் கிடைக்கும் முக்கியமான இடமாக இந்த மாகாணம் இருக்கிறது.
ஷின்ஜியாங் பிராந்தியத்தின் மக்கள் தொகையில் சுமார் 45% பேர் வீகர் இனத்தவர்கள்.
BBC