Our Feeds


Saturday, September 12, 2020

www.shortnews.lk

பற்தூரிகை (ப்ரஷ்) போன்றவற்றுக்கு ஹலால் இலட்சினை பயன்படுத்த தேவையில்லை - ஞானசார தேரர்

 



அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் செயற்குழுவில் அதிகளவு அங்கத்துவம் பெற்றிருப்பது தப்லீக் கொள்கைவாதிகள் என கலகொட அத்தே ஞானசார தேரர் உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் 11ம் திகதி வாக்குமூலம் அளிக்கையில் தெரிவித்திருந்தார்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு உள்ளிட்ட 10 முஸ்லிம் அமைப்புக்களது கோரிக்கைகளுக்கு அமைய நேற்றைய தினம் ஞானசார தேரரிடம் குறுக்கு விசாரணைகள் இடம்பெற்றது.

ஞானசார தேரர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிலையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி ஜாவிட் யூசுப், ஞானசார தேரரது பெயரை மேற்கோள்காட்டி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பானது வஹப்வாதிகள் என உறுதிப்படுத்த முடியுமா என வினவியிருந்தார்.

குறித்த பட்டியலில் உள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவரான அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி என்பவர் ஒரு தப்லீக் கொள்கைவாதி என்றும் அதன் உப தலைவர் அகார் முஹம்மத் ஜமாத்தே இஸ்லாம் கொள்கைவாதி எனவும் ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் செயற்குழுவில் உள்ள குறித்த பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள எம்.எம்.முபாரக், அஷ்ஷெய்க் தாஸிம் ஆகியோர் வஹாப் கொள்கைவாதிகள் என்பதோடு, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையில் உள்ள 50% ஆனோர் வஹாப் கொள்கைவாதிகளின் கீழ் வரும் தப்லீக் கொள்கைவாதிகள் எனவும் ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.

இதன்போது சட்டத்தரணி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் 50% ஆனோர் தப்லீக் கொள்கைவாதிகள் என தெரிவிப்பீர்களாயின் அவ்வாறு இருப்பதால் என்ன தவறு என குறுக்குக் கேள்வியை வினவியிருந்தார்.

அவ்வாறு இருப்பதால் கொஞ்ச கொஞ்சமாக இந்நாடு இஸ்லாம் இராஜ்ஜியமாக மாற்றுவதற்கு இந்நாட்டின் சட்டங்களையும் மீறிய நடவடிக்கைகள் அண்மைக் காலங்களில் அட்டுளுகம பகுதிகளில் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.

சவூதி அரேபியாவின், ரியாத் நகரில் அச்சிடப்பட்டுள்ள வஹாப் கொள்கைவாதிகள் சார்ந்த புத்தகங்கள் இந்நாட்டிற்கு காற்றின் மூலம் வந்ததொன்றல்லவே, அந்தப் புத்தகங்கள் இந்நாட்டில் வசிக்கும் சாம்பிரதாய சூபி முஸ்லிம்களை சிங்கள சமூகத்தில் இருந்து பிரித்து வஹாப் கொள்கைவாதிகளாக மாற்ற காரணமாக அமைவதாக தேரர் தெரிவித்திருந்தார்.

ஞானசார தேரர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர் கல்லறை வழிபாட்டினை எதிர்ப்பதால் தெவட்டகஹ பள்ளிக்கு கூட செல்லுவதில்லை என்றும், கிங்க்ஸ்பரி ஹோட்டல் தாக்குதல் மேற்கொண்டவரும் தப்லீக் கொள்கைவாதிகள் என்றும் தேரர் தெரிவித்திருந்தார்.

இதன்போது சட்டத்தரணி மீளவும் வினா ஒன்றில், ஹலால் உற்பத்திகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றமை தொடர்பில் வினவினார்.

இதற்கு ஞானசார தேரர் தெரிவிக்கையில், ஹலால் என்பது, முஸ்லிம் மக்களது உரிமை என்பதோடு அதற்கு தான் எவ்வித எதிர்ப்பினையும் வெளியிடாது இருப்பினும், பற்தூரிகை போன்ற நுகர்வுப் பொருட்களுக்கு கூட ஹலால் இலட்சினையினை பாவிப்பதில் எவ்வித தேவையும் இல்லை என தான் நம்புவதாக தேரர் குறிப்பிட்டிருந்தார்.

நுகர்வோர் பொருட்களுக்கு ஹலால் இலட்சினை தேவையற்ற தொன்று என்றும் SLS சான்று மாத்திரம் போதும் எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் சுட்டிக்காட்டியிருந்தார்.

  • ஆர்.ரிஷ்மா

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »