ஐஸ் மற்றும் கேரள கஞ்சா மோசடியில் ஈடுபட்ட தம்புள்ள பொருளாதார நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றி வந்த இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கலேவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
´´அய்யா மல்லி´´ எனும் புனைப் பெயரால் அழைக்கப்பட்டு வந்த சியாம் மற்றும் வஸீம் ஆகிய கலேவல, நபடகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கலேவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபர்கள் மோட்டார் வண்டிகள் மூலம் கலேவல, அநுராதபுரம், கெகிராவ மற்றும் தம்புள்ள உட்பட்ட பிரதேசங்களில் உள்ள பொருளாதார நிலையங்களில் கஞ்சா மற்றும் ஐஸ் ஆகிய போதைப் பொருள்களை விநியோகித்து வந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
கலேவல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு இணங்க, கலேவல, நபடகஹவத்த பிரதேசத்தில் இவரது இல்லம் நேற்று (20) இரவு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
பரிசோதனையின் போது, பொதி செய்யப்பட்ட நிலையில் ஐஸ் எனப்படும் போதைப் பொருள் 3 கிராம், கேரள கஞ்சா 4 கிராம், மோட்டார் வண்டி 1, ஐஸ் மற்றும் கேரள கஞ்சா ஆகிய போதைப் பொருள்களை அளப்பதற்கான மின் தராசு ஒன்று, வங்கி மற்றும் ஏ.டி.எம் அட்டைகள், போதைப் பொருள் பொதி செய்ய பயன்படும் பொலித்தீன் உறைகள் மற்றும் 3 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதாக கலேவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சந்தேக நபர்களுக்கு போதைப் பொருள்களை தொடர்ந்து வழங்கி வந்த இவர்களின் மற்றுமோர் சகோதரனை பற்றி விசாரித்து வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 2 நபர்களும் இதற்கு முன்னரும் கஞ்சா வியாபாரம் மற்றும் மோசடியில் நீதிமன்றத்தில் குற்றம் சாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொருளாதார நிலையத்திற்கு வரும் பலருக்கும், அதிக விலைக்கு ஐஸ் விற்றதாக பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.