Our Feeds


Monday, September 28, 2020

www.shortnews.lk

"தாவல் அரசியலின் தற்கால தாற்பரியங்கள்"

 



சுஐப் எம். காசிம்-


அரசியலில் எதிர்பார்த்த விறுவிறுப்புக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சிறிய இடைவெளியை ஏற்படுத்தி உள்ளதால், சில எம்.பிக்களின் எதிர்பார்ப்புக்களிலும் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இருபதை ஆதரிப்பதூடாக அரசாங்கத்தில் இணைவது, அமைச்சுப் பதவிகளைப் பெறுவது அல்லது அரசாங்கத்தின் உச்சளவு சலுகைகளைப் பெற்றுக்கொள்வது. இவைதான் இதில், இந்த எம்.பிக்கள் எதிர்பார்த்தவை. 

உண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள சிறுபான்மைத் தலைமைகளுக்கு இந்த இருபது, கழுத்தில் மாட்டப்பட்டுள்ள கயிறுதான். கடந்த காலத் தேர்தல் வியூகங்களில் விடப்பட்ட தவறுகளிலிருந்து எதிர்நோக்கி வரும் தொடர் சவால்களில், இந்த இருபது மாத்திரம்தான் இத்தலைமைகளின் இருப்புக்கான சவாலாகியுள்ளது. சமூகத்தின் தனித்துவ அடையாளம், கௌரவம், கலாசாரங்களின் பாதுகாப்புக்களுக்கு குரல் கொடுப்பதாகக் கூறி, ராஜபக்ஷக்களுக்கு எதிராகப் பெற்றுக்கொண்ட தனித்துவ ஆணைகள் இப்போது அதே அரசாங்கத்துடன் இணைவது அல்லது இணைய எத்தனிப்பது, தளம்பல், தாவல் போக்குகளின் அடையாளமாகத்தான் நோக்கப்படும். இதில், தலைமைகளை மீறிச் சிலர் தாவ முனைவதுதான் பாரிய சவாலாக சங்கமிக்கப் போகின்றன. 

இதற்கு முன்னர் வந்திருந்த அனைத்து திருத்தங்கள், மசோதாக்களை இத்தலைமைகள் ஆதரித்ததை நோக்கினால், இதையும் ஆதரிக்கலாம் என்ற கணிப்பீடுகளுக்குத்தான் வர முடிகிறது. ஆனால், சந்தர்ப்பங்கள் சாத்தியமாகவுள்ளமை இதுவரைக்கும் தென்படவில்லை. அரசாங்கத்தில் இருந்ததற்காக ஆதரித்ததும், அரசில் இணைவதற்காக ஆதரிப்பதும் வெவ்வேறு பரிமாணங்களில் உள்ளவை. இருந்ததற்காக ஆதரித்தால் சமூக நோக்கு, இணைவதற்காக ஆதரித்தால் தனிப்பட்ட நோக்கு என்றும் கருத முடியாத நிலைமைகளைத்தான் கடந்த காலங்கள் காட்டியுள்ளன.

12 வீத வெட்டுப்புள்ளியைக் குறைப்பதற்கான ஆதரவு இன்று வரை நன்மையளிப்பது போல,18,19 களை ஆதரித்து ஏற்படுத்திய வினைகள் விஸ்வரூபங்களாகியுள்ளதையும் நம்மால் காண முடிகின்றன. பெரும்பான்மைப் பலத்திலுள்ள இந்த அரசாங்கம், எவரையும் வா என்றழைத்து வாக்குக் கேட்கத் தயாராக இல்லை. எனினும், சன்மானமில்லாத விருந்தாளியாகச் சிலர் வர விரும்புவதை அரசாங்கம் கண்டுகொள்ளவே செய்யும். இருபதை எதிர்க்க முனையும் உள்வீட்டு எதிரிகளுக்கு எச்சரிக்கையாக இவர்களின் வருகைகள் பயன்படலாம் என்பதைத் தெரிந்துகொண்டதால்தான், வாசல் கதவுகள் திறக்கப்படவுள்ளன.

அதுமட்டுமல்ல, கடந்த காலத்தில் இக்கட்சிகள் செய்த அவநம்பிக்கைகளுக்கான பழிவாங்கலுக்கு தலைமைகளை உடைத்து, தனிமைப்படுத்துவதை விடவும் வேறேது சிறந்த வழி? தனியாகச் சென்றால் முழு அமைச்சு கிடைத்து விடும் என்ற ஆவல், இந்த எம்.பிக்களைத் துள்ளிக் குதிக்கச் செய்யாதிருக்குமா? 18 க்காகத் தாவிய தவிசாளர் ஒருவர், முழு அமைச்சுப் பெற்றதையெல்லாம் இவர்கள் மனதிற்கொண்டுதான் குதூகலிக்கின்றனர். ஆனால், தாவவுள்ள சில எம்.பிக்களுக்குள்ள பிரச்சினை இதுதான். சன்மானமில்லாமல் செல்வதா? கட்சியை விட்டுத் தனியாகச் சென்றால் சமூகத்தில் தனிமைப்படுவோமா? ஜனாஸா எரிப்பு விடயத்தில் காட்டிய எதிர்ப்புக்கள் எல்லாம் வெறும் அரசியலுக்கான ஏமாற்றுக்களென சமூகம் ஏளனம் செய்யாதா? என்றெல்லாம் இவர்கள் நினைக்கின்றனர். 

இதுவல்ல விடயம். முஸ்லிம் தலைமைகளின் இவ்வாறான தடுமாற்றங்கள், அடிக்கடி ஏற்படுத்திய கட்சித் தாவல்கள் பிறிதொரு கோணத்தையும் காட்டியுள்ளன. முஸ்லிம் அரசியல் அடையாளங்கள் எதுவென்பதில் பிற சமூகங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியதும் இவர்களது தாவல்கள்தான். பிற சமூகங்களுக்கு, முஸ்லிம் அரசியல் அடிப்படை அடையாளத்தில் ஏற்பட்டுள்ள இத் தெளிவின்மைகள், ஜனாஸா எரிப்பு மட்டுமல்ல இதையும் விடப் பயங்கரமான சமூக சவால்களையும் எதிர்காலத்தில் வென்றெடுக்க முடியாத நிலைமைகளையே ஏற்படுத்தப் போகின்றன. "எரித்தாலும் பராவாயில்லை. சாம்பரையாவது அடக்குவதற்குத் தாருங்கள்" என முஸ்லிம் மத அமைப்புக் கோரியதால், அத்தனை நிலைப்பாடுகளும் தடுமாற்றங்களாக நோக்கப்பட்டதிலிருந்துதான், எதையும் வெல்ல முடியாத நிலைக்கு முஸ்லிம் சமூகம் செல்ல நேரிட்டுள்ளது. எனவே, தடுமாற்றமில்லாத தீட்சண்ய அரசியல், சமயப் போக்குகளைக் கையிலெடுப்பதுதான், இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளாகும். 

மேலும், ஆளுமையை வளர்த்துக்கொள்வதில் அஷ்ரப்புக்குப் பின்னர், தற்போதைய தலைமைகள் பெரும் குழப்பமாகவுள்ளமையும், முஸ்லிம் அரசியலுக்கு ஏற்பட்டுள்ள பலவீனங்களில் ஒன்று. கட்சியிலிருந்து எத்தனையோ எம்.பிக்களை நீக்கிய அஷ்ரப், தனது மரணம் வரைக்கும் தனித்துவ தலைமையாக தன்னையே அடையாளப்படுத்தியதில் பலவற்றைச் சாதித்ததையும், நமது கவனங்கள் நழுவவிடக் கூடாது. உண்மையில் ஒற்றைத் தலைமைத்துவத்தில் முஸ்லிம் சமூகம் அடைந்த அரசியல் ஆதாயங்கள், ஒப்பீட்டளவில் அதிகமாகத்தானுள்ளது. இந்தளவு இல்லாவிட்டாலும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைமைகள் இணைந்து பணியாற்றுவது பல நன்மைகளை ஏற்படுத்தியதை, கடந்த கால நல்லாட்சியில் காணக்கிடைத்தாலும், மிக முக்கியமான விடயங்களில் குறிப்பாக, தென்னிலங்கையை நாடிபிடிப்பதில் மற்றும் 52 நாள் அரசில் தீர்மானமெடுப்பதில் மிகப்பெரிய தவறிழைத்ததாகவே சமூகக் கணிப்பீடுகள் உள்ளன. மற்றொரு முஸ்லிம் அரசியல் தலைமையான தேசிய காங்கிரஸின் வியூகங்களைக் கூட, இத்தலைமைகள் கண்டுகொள்ளவில்லையே! ஒருவேளை எதிரியின் பலத்தை தகர்ப்பதற்காகத்தான், தேசியக் களம் தெரியாமல் தடுமாறியதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் அணியிலுள்ள தனித்துவ தலைமைகள் பிறரால் விமர்சிக்கப்பட்டதுண்டு. 

இருபதாவது திருத்தம் பற்றித்தானே இப்போது பேச்சு. இதற்குள், ஏன் கட்சிகளின் கடந்த காலத் தவறுகள் விமர்சிக்கப்படுகின்றன? என எண்ணிவிடாதீர்கள். தவறுகளால் வந்தத் தோல்விகள் தொடர் கதையாகாமலிருக்க உள்ள வழிகள் பற்றிச் சிந்திக்க வேண்டிய தேவைப்பாடுகளில் சிறுபான்மைச் சமூகங்கள் வந்துள்ளன. அதிலும், முஸ்லிம் சமூக அரசியல் இனியும் அடையாளம் காணப்படாமல் விடப்படுவது, இன்னும் பல விடயங்களைத் தவறவிடச் செய்வதற்கான வழிகளையே திறக்கும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »