Our Feeds


Thursday, September 24, 2020

www.shortnews.lk

அமெரிக்க-பஹ்ரைன்-ஐக்கிய அரபு இராச்சியம்-இஸ்ரேல் செய்து கொண்டுள்ள உடன்படிக்கைகள் பலஸ்தீனிய மக்களும் தலைமையும் வன்மையாக கண்டிக்கின்றது. - இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர்

 



நாங்கள் வெறுமனே பள்ளிவாசல்களை மாத்திரம் மீட்டு எமக்கு சொந்தமாகிக்கொள்ள போராடவில்லை, எமது சகோதரர்களின் தேவாலயங்களை மீட்கவும் போராடுகின்றோம். 


அமெரிக்க-பஹ்ரைன்-இஸ்ரேலிய முத்தரப்பு அறிவிப்பையும், அமெரிக்க -இஸ்ரேல் - ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன செய்திகொண்டுள்ள உடன்படிக்கைகள்  பலஸ்தீனிய மக்களும் தலைமையும் வன்மையாக கண்டிக்கின்றது.


பலஸ்தீன பூமியென்பது எமது மூச்சு, இந்த மன்னுக்காக நாம் பலவற்றை இழந்துவிட்டோம். எமது பூர்வீக மண்ணை ஒரு நாடாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற போராட்டத்தில் பலஸ்தீனியர்கள் இன்றும் உள்ளனர்.


எமது பூமியில் எம்மாலேயே கால் வைக்க முடியாத அளவிற்கு இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்புகள் இடம்பெற்று வருகின்றது.


எமது பூமியை மீட்டெடுக்க வேண்டும் என்ற நீண்டகால போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். ஏதேனுமொரு வழியில் பலஸ்தீன பூமியை காப்பாற்றியாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஒரு ஜனநாயக தேசமாக சகல உரிமைகளையும் நாம் பெற்றுக்கொண்டு, இந்த நிலத்தில் இரண்டு தேசங்கள் அல்லது இரண்டு இனத்தவர் என்ற அங்கீகாரத்தை இஸ்ரேல் எமக்குத் தருமாக இருந்தால் நாம் எந்தவொரு நிலையிலும் இஸ்ரேலுடன் இணைக்கப்பாட்டை எட்ட தயாரகவே உள்ளோம் என இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். சைத் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார். 


அவருடனான செவ்வி முழுமையாக, 




கேள்வி:- பலஸ்தீன பூர்வீக பூமி தொடர்ச்சியாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் செல்வதாக  சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இது குறித்த தற்போதைய நிலைமை என்ன? 


பதில்:- நீண்ட காலமாக அமெரிக்காவின் பூரண உதவியுடன் இஸ்ரேல் பலஸ்தீன பூமியை ஆக்கிரமித்து வருகின்றனர். இஸ்ரேலின் இவ்வாறான செயற்பாடுகளுக்கான நிர்வாக அதிகாரம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடமே உள்ளது. அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதனை தயங்காமல் செய்யம் மனோநிலையில் உள்ளனர். எனினும் இதனை தடுக்க வேண்டும், எமது பூமியை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்ற நீண்டகால போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஏதேனும் வழியில் பலஸ்தீன பூமியை காப்பாற்றியாக வேண்டும் என்ற நோக்கில் பேச்சுவார்த்தைகள், உடன்பாடுகள், இணக்கப்பாடுகளுக்கு கூட நாம் தயாராகவே உள்ளோம். அந்த முயற்சிகள் இன்னமும் பலனளிக்கவில்லை. இன்றும் வெஸ்ட்பேங்க் பகுதியில் 30 வீத பலஸ்தீன பூமி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தேசத்திலும் அரைவாசிக்கும் குறைவான நிலமே எம்மிடம் உள்ளது. 


பலஸ்தீன பூமியென்பது எமது மூச்சு, இந்த மன்னுக்காகவே நாம் பலவற்றை இழந்து, தியாகங்களை செய்து இன்றுவரை போராடிக்கொண்டுள்ளோம். சர்வதேச நாடுகளின் மற்றும் அமைப்புகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள முனைகின்றோம். ஆனால் அதுவும் கிடைத்தபாடில்லை. இன்று எமது பூமியில் எமக்கு விவசாயம் செய்ய முடியவில்லை, கால்நடை வளர்ப்பிற்கு அனுமதிக்கப்படவில்லை. எமது பூமியில் எம்மாலேயே கால் வைக்க முடியாத அளவிற்கு இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்புகள் இடம்பெற்று வருகின்றது. அதி பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டு எமது வாழ்கையை நாம் இழந்துள்ள நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை கேட்கவோ, நியாயம் வழங்கவோ வல்லரசுகள் முன்வரவில்லை என்ற வேதனையும் அதிருப்தியும் எமக்கு இன்றும் உள்ளது. எமது பூமிக்குல்லேயே துண்டிக்கப்பட்ட மக்களாக நாம் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எமது பூர்வீக மண்ணை ஒரு நாடாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற போராட்டத்தில் பலஸ்தீனர்கள் இன்றும் உள்ளனர். எனினும் எமது மண்ணிலே 22 வீத உரிமை மட்டுமே எமக்கு உள்ளதை எம்மால் ஒருபோதும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள முடியாது. 


கேள்வி:- சர்வதேச ஆதரவை பெற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் எந்த மட்டத்தில் உள்ளது? 


பதில்:- எமது முயற்சிகளில் எந்தவித பின்னடைவும் இல்லை, நாம் இன்றும் எமது பூர்வீக மண்ணுக்கான போராட்டத்தை முன்னெடுத்தே வருகின்றோம். வரலாற்று பலஸ்தீனத்திற்கும்  பிரிக்கப்பட்ட பலஸ்தீனத்திற்கும் இடையிலான வித்தியாசங்கள் பல உள்ளன. 


அன்று இருந்த நிலையிலும் பார்க்க மிக மோசமான விதத்தில் சூறையாடப்பட்ட, ஆக்கிரமிக்கப்பட்ட, அழிக்கப்பட்ட நிலைமையே இன்று உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இதற்கு பொறுப்புக்கூறியாக வேண்டும். 


1947 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பூமியிலும் பார்க்க அரைவாசிக்கும் குறைவான  நிலப்பரப்பே இன்று பலஸ்தீனர்கள் வசம் உள்ளது. அதேபோல் சர்வதேச சட்டதிட்டங்களை  மதிக்காத நிலைமையில் இஸ்ரேலியர்கள் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதனை நிறைவேற்றும் பலம் அவர்களுக்கு உள்ளதாக நினைத்துக்கொள்கின்றனர். சட்டத்தை கவனத்தில் கொள்ளாது தீர்மானம் எடுக்கும் நிலைமையினால் இன்று பாரிய அளவில் இழப்பை சந்தித்த தேசமாக நாம் மாறியுள்ளோம். இது எவ்வாறானது என்றால் ஒரு நாடாகக் கூட எம்மை அங்கீகரிக்க பலர் தயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பது வேதனையிலும் கொடியதாகும். பொறுப்புக்கூறலுக்கு கட்டுப்படாத வகையிலான செயற்பாடுகளை இஸ்ரேல் முன்னெடுத்து வருகின்றது. 


கேள்வி:- பேச்சுவார்த்தைகள் மூலமாக இஸ்ரேலுடன் இணக்கப்பாடு ஒன்றினை எட்ட இப்போதும் தயாராக உள்ளீர்களா? 


பதில்:- பலஸ்தீனர்களின்  நிலைப்பாடு மிகத் தெளிவானது. 1974 ஆம் ஆண்டில் இருந்து நாம் எமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். ஒரு ஜனநாயக தேசமாக சகல உரிமையையும் எமக்குள் பெற்றுக்கொண்டு, இந்த நிலத்தில் இரண்டு தேசங்கள் அல்லது இரண்டு இனத்தவர் என்ற அங்கீகாரத்தை இஸ்ரேல் எமக்குத் தருமாக இருந்தால் நாம் எந்தவொரு நிலையிலும் இணைக்கப்பாட்டை எட்ட தயாராகவே உள்ளோம். ஆனால் இப்பொது வரையிலும் எமது நிலைப்பாடு என்னவென்பதை தெளிவாக தெரிந்துகொண்டும் இஸ்ரேல் இதற்கு இணக்கம் தெரிவிக்காது உள்ளனர். இன்றுவரை எமது நிலத்தின் முழுமையான பிரஜைகள் என்ற அங்கீகாரத்தை  யூதர்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளனர். பலஸ்தீனர்கள் இந்த நிலத்தில் இரண்டாம் நிலை பிரஜைகள் அல்லது மூன்றாம் நான்காம் பிரஜைகள் என்ற எண்ணத்தில் இஸ்ரேலியர்கள் உள்ளனர். 


பலஸ்தீனர்களுக்கு மாத்திரம் வெவ்வேறு சட்டங்கள் இயற்றப்படுகின்றது. பல்வேறு பாகுபாடுகள் காட்டப்படுகின்றது. குறிப்பாக இராணுவ சட்டங்களில் எம்மை நசுக்குகின்றனர். சரவதேச சட்ட வரையறைகளுக்கு வெளியில் நின்று செயற்படவே இஸ்ரேலியர்கள் விரும்புகின்றனர். பலஸ்தீன வரலாற்றை இஸ்ரேலியர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆனால் இந்த பூமி எமது தாய் பூமி என்பதையே நாம் மீண்டும் உலகிற்கு எடுத்துக்கூற விரும்புகின்றோம். 


கேள்வி:- இஸ்ரேலின் இந்த நிலைப்பாட்டிற்கு காரணம் என்னவென நீங்கள் நினைக்கின்றீர்கள்? 


பதில்:- இந்த பூமியில் வாழும் சகல இன, மத மக்களை விடவும் தாம் மாறுபட்டவர்கள் என்ற எண்ணமே அவர்களிடம் உள்ளது.  யூதர்களை விட உயர்ந்தவர்கள் எவரும் இல்லை, ஏனைய மதத்தவர், இனத்தவர் அனைவரும் தாழ்ந்தவர்கள் என்பதே அவர்களின் மனநிலையில்  இருக்கின்றது. இது தான் அனைத்திற்கும் காரணமாகவும் அமைந்துள்ளது. இது சியோனிஸ கொள்கையின் அசைக்கமுடியாத  நம்பிக்கையென யூதர்கள் மாற்றிக்கொண்டுள்ளனர். 


கேள்வி:- பலஸ்தீன பூமியில் ஏனைய மதத்தவரை அங்கீகரிக்கும் மனோநிலை உங்களிடம் உள்ளதா? 


பதில்:- பலஸ்தீன பூமியில் வாழும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஏனையவர்கள் அனைவரையும் பலஸ்தீனர்களாக அங்கீகரிக்கும் மனநிலை எமக்கு உண்டு. அதுதான் எம்மை எமது பூமியின் 22 வீத  சொந்தக்காரர்களாக மாற்றும் நிலைமையையும் உருவாக்கியுள்ளது. அரபு சட்டத்தின் கீழ் கிறிஸ்தவர்கள் பூரண சுதந்திரத்துடன் வாழ்கின்றனர். எமது தலைவர்கள் ஏனைய மதத்தவர்களுக்கு குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளனர். அதன் ஆரோக்கியமான மாற்றம் என்னவென்றால் கிறிஸ்தவ பேராயர்கள் பலர் இன்று எமக்கு ஆதரவாக செயற்பட  ஆரம்பித்துள்ளனர். இதனை மிகப்பெரிய நன்மையாக நாம் கருதுகின்றோம். 


ஆக்கிரமிப்புகள் முற்று முழுதாக எமது பூமியில் இடம்பெற்றுள்ளன. இன்று பலஸ்தீன பூமியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் அனைத்துமே எரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு நடக்கும் அழிவுகளை  சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும். எமது புனித வழிபாட்டு தளங்கள் அனைத்துமே இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 


எனவே எமது நிலைப்பாடுகளை சர்வதேச சமூகம் கருத்தில் கொண்டு எமக்கு எதிராக ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். பலஸ்தீன பூமி எமக்கு முக்கியம், இந்த பூமியில் முஸ்லிம்கள் வாழ்கின்றனரா அல்லது கிறிஸ்தவர்கள்  வாழ்கின்றனரா என்பதல்ல எமக்குள்ள பிரச்சினை. நாம் அனைவரும் ஒரு சமூகமாக ஒரு தேசத்தின் கீழ் வாழ வேண்டும் என்ற உணர்வுபூர்வமான நிலைப்பாட்டில் உள்ளோம். 


பெத்லேகம் , ஜெருசலேம் என்பதெல்லாம் முஸ்லிம்களின் பிரதேசம் அல்லது கிறிஸ்தவர்களின் பூமி என்று கூற முன்னர் இவை அனைத்தும் பலஸ்தீன பூமி என்று கூறவே நாம் விரும்புகின்றோம். எமது சகோதரர்களின் பூமியை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ளனர், எமது முஸ்லிம்களின் பூமியை சூறையாடியுள்ளனர். புனித பிரதேசங்கள் அனைத்துமே பலஸ்தீனத்திற்கு சொந்தமானது. நாங்கள் வெறுமனே பள்ளிவாசல்களை மாத்திரம் மீண்டும் எமக்கு சொந்தமாக்கிக்கொள்ள போராடவில்லை, எமது கிறிஸ்தவ சகோதரர்களின் தேவாலயங்களை மீட்கவும் போராடுகின்றோம். 


எமது போராட்டம் முஸ்லிம்களுக்காக மட்டுமல்ல பலஸ்தீன பூமியானது பலஸ்தீனர்களாக வாழும் சகலருக்கும் சார்ந்ததாகும். மிக முக்கியமாக ஜெருசலேத்திற்காக போராடிக்கொண்டுள்ளோம். இரு சமூகமுமே எமது மண்ணில் வாழ வேண்டும் என்றே நினைக்கின்றோம். முஸ்லிம் பாடசாலைகளில் கிறிஸ்தவ மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதனை தடைகள் ஏதுமின்றி அவர்கள் அனுபவிக்க வேண்டும் என கருதுகின்றோம்.

 ஒரு கிறிஸ்தவ குடுபத்தின் இரண்டாம் குடும்பமாக ஒரு முஸ்லிம் குடும்பத்தை நினைக்கும் அளவிற்கு நாம் அவர்களுடன் உணர்வுபூர்வமாக வாழ்கின்றோம். நாம் இரண்டு சமூகமும் ஒரே விடுமுறைகளை கொண்டாடுகின்றோம். புனித தினங்களை கொண்டாடுகின்றோம். இது வேறெங்கும் உள்ளதா என தெரியவில்லை. ஆனால் பலஸ்தீனத்தில் முஸ்லிம் -கிறிஸ்தவ உறவு மிக நெருக்கமாக உள்ளது. 


கேள்வி:- பலஸ்தீன நெருக்கடிகளை கையாளும் உங்களுக்கு இலங்கையின்  ஒத்துழைப்பு எந்தளவு கிடைக்கின்றது? 


பதில்:- தற்போது இலங்கையில் புதிய ஆட்சியொன்று உருவாகியுள்ளது. இதற்கு முன்னர் சகலரும் எமக்கு முழுமையான ஆதரவை வழங்கினர். பலஸ்தீனர்களின் விவகாரம் இங்கு சகலருக்கும் தெரிந்துள்ளது என நம்புகின்றோம். இலங்கையின் சகல சமூகங்களும் எமது பிரச்சினையில் எமக்கான ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர். 


எனவே நாங்கள் இங்கு இருப்பதில் பாதுகாப்பை உணர்கின்றோம், திருப்திகரமானதாகவும் உள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது. இப்போதும் அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை. இப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எமக்காக குரல் எழுப்பியுள்ளார். 


அதே நம்பிக்கை எமக்கு இப்போதும் உள்ளது. எம் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் நல்லதொரு  நட்பும் உள்ளது. 2014 ஆம் ஆண்டு நெருக்கடி நிலைமையில் நிதி உதவிகளை அரசாங்கம் எமக்கு வழங்கியது. காஸா விவகாரத்தின் போதும் இலங்கை அரசாங்கம் எமது பக்கமே நின்றது. எனவே புதிய அரசாங்கம் நல்லதொரு நட்புறவை எம்முடன் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. 


கேள்வி:- இலங்கையிலும் இன முரண்பாடுகள் இன்னமும் தொடர்ந்தவண்ணமே உள்ளது, இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன? 


பதில்:- இலங்கையின் நிலைமைகள் எமக்கு நன்றாகவே தெரியும். இலங்கையில் கடந்த கால வரலாறுகளை நாம் நன்கு அறிந்துள்ளோம். எனவே இலங்கை அரசாங்கக்கிற்கு எமது நிலைமைகள் நன்றாக உணரக்கூடியதாக இருக்கும். பலஸ்தீனர்கள் படும் பாடு என்ன என்பதை இலங்கை அரசாங்கத்தினால் மிக இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும் என நினைக்கின்றோம். இலங்கையிலும் எம்மைப்போன்ற வேதனை மிகுந்த சூழ்நிலைகள் உருவாகாது சகல இன மக்களையும் அவர்களின் மதங்களையும் அங்கீகரித்து சுய அடையாளங்களுடன் வாழ அனுமதிக்க வேண்டும். 


கேள்வி:- கொவிட் வைரஸ் தாக்கம் பலஸ்தீனத்தை எந்தவகையில் பாதித்துள்ளது? 


பதில்:- ஆரம்பத்தில் இருந்தே நாம் கொவிட் வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையை எடுத்துவிட்டோம். இலங்கை இந்த நடவடிக்கைகளை கையாள  முன்னரே நாம் எமது மக்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டோம். ஆனால் இஸ்ரேலிய எல்லைக்குள் இருக்கும் பலஸ்தீனர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் பரப்பில் கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தினால் அப்பகுதிகளை ஒட்டி வாழும் பலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எமது ஊழியர்கள் கடினமான நிலைமைகளில் இஸ்ரேல் பூமியில் சேவைகளில் ஈடுபட்டுள்ளனர். 


ஆனால் வைரஸ் தொற்று இருப்பின் அவர்களை சோதனை சாவடிகளில் தள்ளிவிட்டு சென்றுவிடுவார்கள். பாதிக்கப்பட்ட எவருக்கும் மருத்துவ உதவிகளை கூட செய்ய இஸ்ரேலியர்கள் முன்வரவில்லை. இவ்வாறான காரணங்களினால் பலஸ்தீனர்கள்  வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். எவ்வாறு இருப்பினும் நாம் ஏனைய நாடுகளை விடவும் மிக குறைவான வீதமளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். 


வல்லரசுகள் என கூறும் நாடுகளே இன்று நாசமாகியுள்ளது. இதற்கு நல்லதொரு உதாரணம் அமேரிக்கா என்பேன். எனினும் எம்மிடம் சிறந்த மருத்துவம் உள்ளது, தகுதியான வைத்தியர்கள் உள்ளனர். ஆனால் எம்மை பயன்படுத்திக்கொள்ள எவரும் நினைக்கவில்லை. 


கேள்வி:- கொவிட் வைரஸ் தாக்கங்களின் பின்னர்  பொருளாதார நிலைமைகள் எவ்வாறு உள்ளது? உங்களுக்கு உதவும் நாடுகளின் உதவிகள் இப்போதும் கிடைக்கின்றதா? 


பதில்:- உலகிலுள்ள சகல அரபு  நாடுகளும் எமக்கு உதவுகின்றனர். பலஸ்தீனத்தில் 95 வீதத்திற்கும் அதிகமானவர்கள் கற்ற சமூகமாகவே உள்ளனர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு முன்னர்  உலகில் சகல பகுதிகளிலும் எமது மக்களை பார்க்க முடியும். ஐரோப்பியா, லத்தின் அமெரிக்க நாடுகளில் கூட முக்கிய  துறைகளில் எம்மவர்கள் அதிகாரங்களில் இருந்தனர். மிகவும் கற்ற, அவசியமான  துறைகளில் பலஸ்தீனர்கள் இருந்தனர். 


ஆனால் ஆக்கிரமிப்பிற்கு பின்னர் எமது நிலைமைகள் மாறிவிட்டது. இன்று அபிவிருத்தி, வளர்ச்சி குறித்து சிந்திக்க கடினமான சூழலில் நாம் உள்ளோம். இலங்கையை போன்றே பலஸ்தீனத்திற்கும் விவசாயம் மிக முக்கிய துறையாக உள்ளது. ஆனால் எமது பூமி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில் எம்மால் தேசிய உற்பத்திகள் குறித்து சிந்திக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. 


சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. காலணிகள் உற்பத்தி போன்றவற்றில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். ஆனால் இவை அனைத்தையும் இஸ்ரேலிய கட்டுபாட்டின் கீழ் இருந்து முன்னெடுக்க வேண்டியுள்ளது. எமது உற்பத்திகள் அனைத்துமே இஸ்ரேலினால் சுரண்டப்படுகின்றது. 


கேள்வி:- அமெரிக்க-பஹ்ரைன்-இஸ்ரேலிய முத்தரப்பு உடன்படிக்கை அதேபோல் அமெரிக்க -இஸ்ரேல் - ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன செய்திகொண்டுள்ள உடன்படிக்கைகள்  குறித்து பலஸ்தீனத்தின் நிலைப்பாடு என்ன? 


பதில்:- அமெரிக்க-பஹ்ரைன்-இஸ்ரேலிய முத்தரப்பு அறிவிப்பையும், அமெரிக்க -இஸ்ரேல் - ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகள்  பலஸ்தீனிய தலைமை தனது வலுவான நிராகரிப்பு மற்றும் கண்டனத்தை அறிவித்துள்ளது. இது ஜெருசலேம், அல்-அக்ஸா மற்றும் பலஸ்தீனிய நியாயங்களை  காட்டிக் கொடுப்பதாகவும், பலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் அசிங்கமானதும் கீழ்த்தரமான குற்றங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஆதரவளிக்கும் ஒரு முக்கிய வாய்ப்பானதாகவும் நாம் கருதுகின்றோம்.  இஸ்ரேல் தொடர்ந்து பலஸ்தீன நிலங்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் கட்டுப்படுத்துகிறது. 


இவர்களின் நோக்கம்  ஜெருசலேமை யூதமயமாக்குவதற்கும், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ புனித தளங்களை கட்டுப்படுத்துவதற்கும், பலஸ்தீன மக்களுக்கு எதிராக குற்றங்களைச் செய்வதற்கும் தீவிரமாக செயற்படுவதாகும். இந்த விடயத்தில் அரபு சமாதான முன்முயற்சி, அரபு மற்றும் இஸ்லாமிய உச்சிமாநாடுகளின் முடிவுகள் மற்றும் சர்வதேச சட்டபூர்வமான தன்மை ஆகியவற்றைப் போலவே இதனையும் மிக மோசமானதாக நாம் கருதுகின்றோம்.  


இந்த உடன்படிக்கை பலஸ்தீனிய மக்களுக்கு மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனால் பஹ்ரைன் இந்த உடன்படிக்கையில் இருந்து பின்வாங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இஸ்லாமிய நாடுகளுக்கும் எமது நிலைமைகளை நாம் எடுத்துக்கூறுகின்றோம். 


-நேர்காணல் :- ஆர்.யசி

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »