நாட்டில் ஜனாதிபதி இல்லாதபோது முப்படைகளை அழைக்க பிரதமருக்கு அதிகாரம் இருந்தபோதும் தான் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைத்தால் அவரைச் சந்திக்க செல்லக் கூடாது என முப்படைகளின் தளபதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டளை இட்டிருந்ததாக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன சாட்சியமளித்தார்.
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் கடந்த 24ம் திகதி தனது சாட்சியத்தை பதிவு செய்யும் போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.
அத்துடன் தான் தொடர்ச்சியாக உளவுத்துறை ஒருங்கிணைப்பு கூட்டங்களில் பங்கேற்றபோதும் அக்கூட்டங்களில் ஒருபோதும் ஸஹ்ரான் கைது செய்யப்பட வேண்டிய நபர் என்பதை தேசிய உளவுச் சேவை பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன அங்கு குறிப்பிடவில்லை எனவும் ருவன் விஜயவர்தன சுட்டிக்காட்டினார்.
(எம்.எப்.எம்.பஸீர்)