Our Feeds


Wednesday, September 30, 2020

www.shortnews.lk

இந்திய வரலாற்றில் இதுவொரு கருப்பு நாள் - பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பில் உவைஸி காட்டம்

 


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேரும் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை அக்கட்சியின் கொண்டாடி வருகின்றனர்.

தீர்ப்பு வெளிவந்தவுடன் அறிக்கை மூலம் தமது உணர்வை வெளிப்படுத்திய எல்.கே. அத்வானி, லக்னெள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் வழங்கிய குறிப்பிடத்தக்க தீர்ப்பை நெஞ்சார்ந்து வரவேற்கிறேன். ராம ஜென்ம பூமி இயக்கம் மீது நானும் பாரதிய ஜனதா கட்சியும் கொண்டிருந்த ஈடுபாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது என்று கூறினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் கனவை நனவாக்க வழிவகுத்த உச்ச நீதிமன்றத்தின் கடந்த ஆண்டு நவம்பர் மாத தீர்ப்பைத் தொடர்ந்து மற்றொரு வரலாற்றுப்பூர்வ தீர்ப்பாக சிபிஐ நீதிமன்ற முடிவு அமைந்துள்ளதை ஆசிர்வதிக்கப்பட்ட நிகழ்வாக நான் கருதுகிறேன். அயோத்தியில் அழகிய ராமர் கோயில் கட்ட முடிக்கப்படும் நாளை எதிர்நோக்கும் கோடிக்கணக்கான எனது நாட்டவர்களுடன் நானும் அந்த அழகிய ஆலயத்தின் துவக்க நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று அத்வானி கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து தமது வீட்டுக்கு வந்திருந்த கட்சித் தலைவர்கள், செய்தியாளர்கள் உள்பட அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி அத்வானி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முரளி மனோகர் ஜோஷி, "சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுப்பூர்வமானது. 1992, டிசம்பர் 6ஆம் தேதி சம்பவம், சதி அல்ல என்றும் எங்களுடைய ரத யாத்திரையின் திட்டமாக அது இருக்கவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது. ராமர் ஆலய கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் இந்த செய்தியை அறிந்து மகிழ்ச்சியடைவார்கள்" என்று தெரிவித்தார்.

இதேபோல, வழக்கின் தீர்ப்பை ஆதரித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, "பாஜக தலைவர்கள் மீதும், சாதுக்கள் மீதும் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பொய் வழக்குகள் புனைந்தது, தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக பொய் வழக்குகள் போட்டதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

கொந்தளிக்கும் ஒவைஸி

தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவரும் ஹைதராபாத் தொகுதி எம்.பியுமான அசாதுதீன் ஒவைஸி, "இந்திய நீதித்துறை வரலாற்றில் இது ஒரு கறுப்பு நாள். இப்போது நீதிமன்றம் அந்த சம்பவத்தில் சதி நடக்கவில்லை என்று கூறியிருக்கிறது. தற்செயலாக அது நடக்கவில்லை என கூற இவ்வளவு நாள் ஆகுமா என எனக்கு தெளிவுபடுத்துங்கள்" என்று கூறினார்.

"இது சட்டம் தொடர்புடைய பிரச்சனை. பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதற்கான ஒரு பிரச்சனை. ஆனால் கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக அவர்கள் உள்துறை அமைச்சராகவும், மனித வளத்துறை அமைச்சர்களாகவும் ஆக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்டனர். ஏனென்றால் ஆட்சியில் இருப்பது பாரதிய ஜனதா கட்சி" என்று ஒவைஸி தெரிவித்தார்.

BBC 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »