சுஐப் எம். காசிம்
"முழு யானை இருக்க முட யானை" பிளிறுவது போலுள்ள அரசியல் சூழல் தோன்றி வருவது அனைவரையும் அசத்திப் போட்டுள்ளது. அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் எதிர்கொண்டுள்ள இன்றைய எதிர்ப்புக்கள், இயலாதோரின் அழு குரலாகவே அமையப் போகின்றன. அரசாங்கத்திற்குள்ளும் இதைச் சிலர் எதிர்க்கின்றனர். காலவோட்டத்தில் இவை சமரசத்திற்கு வரலாம் அல்லது எதிர்ப்போரின் அபிலாஷைகளையும் இருபது உள்ளடக்கலாம்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இது உள்வீட்டு விவகாரம். ஆனால், எதிர்க் கட்சிகள் எதிர்ப்பதுதான் விவகாரமாகி வருகிறது. ஐக்கிய தேசிய கட்சி, இதன் எதிர் வினையான ஐக்கிய மக்கள் சக்தி என்பவையும் இருபதை எதிர்க்கிறதே ஏன்?எதைச் சாதிக்கும் சாத்தியத்தில் இக்கட்சிகள் எதிர்க்கின்றன? இதுதான், இன்று பலரையும் அசத்தியுள்ளது. உண்மையில் இது இரட்டிப்பு அசத்தல்தான்.
நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றி, அரசாங்கத்தை அமைத்தது மட்டுமல்ல, முதலாவது பிரதமரையே உருவாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி, இன்று கையேந்துவதற்கும் பாத்திரமில்லாத யாசகனாகிவிட்ட நிலையில், இருபதை எதிர்க்கும் இலட்சணம் யாரை அசத்தாமல் விடும்? இதுமட்டுமல்ல கைக்கு வந்த ஒரேயொரு எம்.பியையும் பாராளுமன்றத்திற்கு அனுப்பியதாகவும் இல்லை. இதற்குள்ளா இருபதற்கு எதிர்ப்பு?
அண்மையில் இக் கட்சியின் 74 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் வெறும் முன்னாள் பதவிகளால் அலங்கரிக்கப்பட்டதை விடவும் ஆச்சர்யமும் அசத்தலும் வேண்டுமா? இப்போதுதான் பிரதித் தலைவரே தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை தடைகளைக் கடக்க உள்ள இக்கட்சியின் எதிர்காலத்தில், தலைவர் தெரிவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். பிரதித் தலைவர் அடுத்தபடியாக தலைவராகும் மரபை ஏற்க முடியாது, தலைவருக்கும் செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கின்றனர் வஜிரஅபேவர்தன உள்ளிட்டோர். குடும்பத்தின் பிடியிலிருந்து கட்சி கை நழுவும் நிலை ஏற்படக்கூடாதென, ரணிலால் நகர்த்தப்பட்ட காய்தான் ருவன் விஜேயவர்தன.
இதையுணர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள், ரணிலின் காய் நகர்த்தல்களை முடிந்த வரை முறியடிப்பது, முடியாவிட்டால் வெளியேறுவதென்ற விரக்தியில் உள்ளனர். இவர்களின் வெளியேற்றம் ஐக்கிய மக்கள் சக்தியைப் பலப்படுத்துமென எடுத்த எடுப்பிலும் சொல்ல முடியாதுள்ளது. ஒரு வகையில், கட்சியை அதிகாரமில்லாத யாசகனாக்கிய பொறுப்புக்கு, இவர்கள் சஜித்தையே பொறுப்பாக்குகின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிடிவாதமின்றி பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்திருந்தால், கட்சியின் கட்டுக்கோப்புக் குலைந்திருக்காது. ரணிலின் இறுமாப்பைத் தகர்க்க உண்மையில் சஜித் பிரேமதாசவைத் தவிர வேறு தெரிவு இல்லைதான். என்ன செய்வது தருணம் சரியில்லை என்பதை சஜித் சிந்தித்திருக்க வேண்டுமே! இதுதான், இன்று வரைக்கும் யானைக்காக வாதிடுவோரின் நிலைப்பாடு.
அமைச்சுப் பதவிகளையாவது ஆசைகாட்டி அரவணைக்க, இவர்களில் எவரும் எம்.பிக்களாகவும் இல்லை. இதனால், யானைப்பாகனாக யார் வருவாரென்பதில் அரசுக்கு அக்கறையும் இல்லை. தொலைபேசிகளைத் தொடர்பு கொள்வதுதான், இன்று அரசுக்குள்ள ஆறுதல். ஆறுதல் மட்டுமல்ல உள்வீட்டு நெருக்குவாரங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கும் இது தவிர வழியுமில்லை. இந்த வழிகளில் விழும் பூச்சிகளாக சிறுபான்மை எம்.பிக்கள் உள்ளவரை, அரசாங்கம் அஞ்சப் போவதுமில்லை. விழுவதற்கு முன்னர் சில விடயங்களைப் பேசுவதற்காக சில எம்.பிக்கள் எத்தனிப்பது,தொலைபேசி இலக்கங்கள் படிப்படியாகத் தொலையவுள்ளதையே தெளிவுபடுத்துகின்றன.
புதிய அரசியலமைப்புக்கு முன்னர் இருபதில் எதையாவது நியாயங்கண்டு அல்லது நியாயங்களைச் சேர்ப்பதற்கு எம்.பிக்கள் சிலர் எடுக்கும் முயற்சிகள், தனித்துவ கட்சிகளின் தலைவர்களைத் தனிமைப்படுத்தலாம். இவ்வாறு நிகழின், உதயமாகவுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியிலும் தனிநபர் ஆளுமையே அலங்கரிக்கப்படும். எம்.பிக்களை விடுத்து, வெறும் தலைவர்களாக வந்து, ஐக்கிய மக்கள் கூட்டணியை பலப்படுத்த முடியாதே! எனவே, எல்லாப் பலங்களும் உடைவது, 'நதிகளின் கிளைகள் கடைசியாகக் கடலில் கலப்பது' போன்று அரசாங்கத்திலே கலக்கும். இதனால்தான் இவற்றை, இயலாதோரின் அழுகுரல் என்கின்றோம்.
எனவே, இருப்பதைச் சாத்தியமாக்கல் அல்லது எதிர்க் கட்சியைப் பலப்படுத்தல் பற்றித்தான் சிறுபான்மைஅரசியல் நகர வேண்டும். வீர வசனம், வீறாப்புச் சபதம், விட்டில் பேச்சுக்களைக் கைவிட வேண்டிய கட்டத்திற்குள் தனித்துவ தலைமைகள் வர வேண்டியுள்ளன. உதவாவிட்டாலும் உபத்திரம் செய்யாமலாவது இருந்து, எதிர்கால இலக்குகளை வெல்ல, இருபதாவாது திருத்தத்திலாவது இறுமாப்பைக் கை விடுவதுதான், தமிழ் மொழிச் சமூகங்களுக்குப் பாதுகாப்பு.
கடந்த சகல தேர்தல்களிலும் இவ்வாறான நடுநிலைக் கொள்கைகளை இத்தலைமைகள் கையிலெடுத்திருக்க வேண்டும். ஆகக் குறைந்தது பொதுத் தேர்தலிலாவது இது கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், இன்று கைவிடப்படும் சூழ்நிலைக்கு சிறுபான்மைச் சமூகங்கள் சென்றிருக்காதா? என்றே சிந்திக்கத் தோன்றுகிறது.