உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவு ஏற்கனவே வழங்கிய தகவலைகளை தவிர வேறு புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்ள இலங்கை புலனாய்வு பிரிவு தவறியதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட போது நாட்டின் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய பூஜித் ஜயசுந்தர, நேற்று (29) ஐந்தாவது முறையாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் அளித்தார்.
இதன்போது அரச மேலதிக சொலிசிட்டர் நாயகம் முதலாவதாக அவரிடம், ´உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரே இரவில் திட்டமிடப்படவில்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? என வினவினார்.
´ஐயா, சஹ்ரானும் அவரது குழுவும் ஒரு தீவிரவாத சித்தாந்தத்தை கொண்டு சென்றனர். ஆனால் எப்போது அவர்கள் தாக்குதல் குறித்து திட்டமிட்டார்கள் என்பது குறித்து சரியாக தெரியாது. தாக்குதலுக்குப் பின்னர் சஹ்ரான் மற்றொரு குழந்தையை எதிர்பார்த்து ஒரு மருத்துவரைக் கூட சந்தித்தாக எனக்கு தனிப்பட்ட முறையில் தகவல் கிடைத்தது. அவ்வாறு இருக்கையில் சஹ்ரானுக்கு இது போன்றதொரு அழிவுக்கான சிந்தனை அவரது மனதில் எப்போது வந்தது என்பதை என்னால் கணிக்க முடியாதுள்ளது. தாக்குதல் குறித்து வெளிநாட்டு புலனாய்வு பிரிவு அளித்த முன் எச்சரிக்கைகளை அரச புலனாய்வு சேவையால் உறுதிப்படுத்த முடியவில்லை.´ என அவர் கூறினார்.
இதன்போது அரச மேலதிக சொலிசிட்டர் நாயகம் அவரிடம், ´சஹ்ரானும் அவரது குழுவும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டதால் இதுபோன்ற தாக்குதலைத் நடத்தினார்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? என வினவினார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் பொலிஸ்மா அதிபர், ´யாருடைய மனதிலும் என்ன இருக்கிறது என்பதை என்னால் வெளிப்படுத்த முடியாது. அவர்கள் ஐ.எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டும் இருக்கலாம். அவர்கள் வேறு ஒருவரின் தேவைக்காகவும் தாக்குதலை நடத்தியிருக்கலாம். எனபதே நான் சொல்லக்கூடியது. இந்த சம்பவத்திற்குப் பின்னர் மிகவும் அதிர்ச்சியடைந்த இரண்டு நபர்களில் ஒருவராக, இது தொடர்பில் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்பதே எனது கருத்து´ என்றார்.
இதன்போது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினரான மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, ´இலங்கையில் உள்ள அரச புலனாய்வு பிரிவு இஸ்ரேல், பலஸ்தீன் போன்ற நாடுகளில் நடந்த சம்பவங்கள் குறித்து உங்களுக்குத் அறிவித்தாக நீங்கள் கூறுகின்றீர்கள், ஆனால் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து கிடைத்த வெளிநாட்டு புலனாய்வு தகவல்களுக்கு மேலதிகமாக சொந்த தகவல்களைத் அவர்கள் சேகரிக்கவில்லை என்பதற்கு நீங்கள் கூறுவது அர்த்தமாகுமா? என கேட்டார்.
அதற்கு பதிலளித்த அவர், ´ஆமாம் ஐயா, வெளிநாட்டு புலனாய்வுத்துறை வழங்கிய தகவல்களை தவிர, எமது புலனாய்வு பிரிவு தாக்குதல் குறித்த எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை´ என அவர் பதில் வழங்கினார்.
அப்படியானால் ஏப்ரல் 4 ஆம் திகதி வெளிநாட்டு புலனாய்வு பிரிவில் இருந்து முன் அறிவித்தல்கள் எதுவும் கிடைக்காதிருந்திருந்தால். அரச புலனாய்வு பிரிவுக்கு தெரியாமல் ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் அல்லவா? என ஆணைக்குழு உறுப்பினர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி வினவினார்.
இதற்கு பதிலளித்த அவர், ´ஆமாம் ஐயா, அவ்வாறு நடந்திருக்கலாம். வெளிநாட்டு புலனாய்வுத் துறை எங்களுக்கு வழங்குவதைத் தவிர எமது அரச புலனாய்வு பிரிவினர் எந்த தகவலையும் பெற்றிருக்கவில்லை. 52 நாள் அரசியல் புரட்சி காலத்தில் மட்டும் அல்ல அதற்கு பின்னரும் அரச புலனாய்வு பிரிவு வேறு நோக்கத்துடன் கடமையாற்றியது. மற்ற நாடுகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுடன் ஒத்துப்போகும் போக்கைக் கொண்டிருப்பதைக் காட்ட அவர்கள் எதனையும் செய்யவில்லை, மேலும் இந்த விடயத்தில் சொந்த தகவல்களையோ முடிவுகளையோ அல்லது ஆலோசனையையோ அவர்கள் வழங்கவில்லை.´ என்றார்