அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 1992 ல் இடிக்கப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் விடுதலை செய்யப்படுகின்றனர் என லக்னோ நகரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தீர்ப்பின்படி குற்றச்சாட்டப்பட்ட 48 பேரில் உயிருடன் இருக்கும் 32 பேரும் விடுதலை ஆகின்றனர். எனினும் சிபிஐ தரப்பு உயர் நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.
வழக்கின் விவரம் என்ன?
சதித்திட்டம் தீட்டி, பாபர் மசூதியை இடிக்க ஆயிரக் கணக்கானவர்களைத் தூண்டி விட்டதாகவும், வன்முறையைத் தூண்டியதாகவும், சமூகக் குழுக்களிடையே பகைமையைத் தூண்டியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
பல்வேறு முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக்கி, ஒரே வழக்காக 1993 முதல் சிபிஐ விசாரித்து வந்தது. குற்றம்சாட்டப்பட்ட 48 பேரில் தற்போது 32 பேர் உயிருடன் உள்ளனர்.
சிவசேனை நிறுவனர் பால் தாக்ரே,விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் உள்ளிட்ட பிறர் வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்தபோது உயிரிழந்துவிட்டனர்.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கட்யார், கல்யாண் சிங் மற்றும் பிற இந்துத்துவ தலைவர்கள் மீது இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டது. பாபர் மசூதி 1992 டிசம்பர் 6ஆம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த சாத்வி ரிதம்பரா, சம்பத் ராய் உள்ளிட்ட 24 பேர் தீர்ப்பு வழங்கப்பட்டபோது நீதிமன்றத்தில் இருந்தனர்.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு வயது மூப்பு காரணமாக, தீர்ப்பு வழங்கப்படும் நீதிமன்றத்தில் இருக்க வேண்டியதில்லை என்று விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் உமாபாரதி மற்றும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கட்டிருப்பதால் நீதிமன்றத்தில் இருக்க வேண்டியதில்லை என்று விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
அத்வானி உள்ளிட்ட எட்டு பேர் காணொலி காட்சி வாயிலாக, தீர்ப்பு நேரத்தின்போது நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.
இந்த வழக்கின் விசாரணையை இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தை ஏப்ரல் 2017இல் அறிவுறுத்தியிருந்தது.
பின்னர் பல முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டு, செப்டம்பர் 30, 2020க்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது .
தீர்ப்பு வழக்காடுவதையொட்டி உத்தரப் பிரதேச காவல்துறையைச் சேர்ந்த இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 13 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் எட்டு கம்பெனி ஆயுதப் படையினர் லக்னௌ நகரம் முழுவதும் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அயோத்தி நகரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாபர் மசூதி - இரண்டு வழக்குகள்
அயோத்தி பாபர் மசூதியை மையமாகக் கொண்டு இரண்டு வழக்குகள் இருந்தன. ஒன்று சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான 'சிவில்' வழக்கு. இன்னொன்று மசூதியை இடிப்புக்கு காரணமானவர்கள் என்று குட்டற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான 'கிரிமினல்' வழக்கு.
சிவில் வழக்கில் ஏற்கனேவே இந்துக்கள் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்து அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கிரிமினல் வழக்கில் விசாரனை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.
சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்றாலும், மசூதி இடிக்கப்பட்டது தவறு என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.
இந்த மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று 1992க்கு முன் பாரதிய ஜனதா கட்சியின் எல்.கே. அத்வானி பல ரத யாத்திரைகளை நடத்தியிருந்தார்.
1992ஆம் ஆண்டு, டிசம்பர் 6 ஆம் தேதியன்று விஸ்வ இந்து பரிஷத்தின் (வி.எச்.பி) ஆர்வலர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளின் சில தலைவர்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் (கர சேவகர்கள்) கலந்து கொண்டனர்.
பேரணி பின்னர் வன்முறையாக மாறியது. அங்கிருந்த கும்பல் அந்த பகுதியையே தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, 16ஆம் நூற்றாண்டின் பாபர் மசூதியை இடித்தது.
அப்போது உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கல்யாண் சிங் .
அப்போதைய குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா, உத்தரப் பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, சட்டசபையை கலைத்தார்.
மத்திய அரசு 1993இல் ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்து, சர்ச்சைக்குரிய நிலத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
பின்னர், இந்த இடிப்பு சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது, இந்த வழக்கில், 68 பேர் தான் இதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.
1949ஆம் ஆண்டில் மசூதிக்குள் ராமர் சிலை முதன்முதலில் நிறுவப்பட்டபோதே, அதன் இடிப்புக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டதாக சிலர் கூறுகின்றனர்.
BBC