அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் ஊடாக அடிப்படை உரிமை மீறல் இடம்பெறுவதால் குறித்த சட்டமூலம் பொதுஜன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி இந்திக கால்லகேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
சட்டத்தரணி தர்ஷன வேரதுவகேவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் ஊடாக உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மற்றும் பல ஏற்பாடுகள் குறைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்வதற்கான வாய்ப்பை இழத்தல்,
தேர்தல் ஆணைக்குழுவினால் வௌியிடப்படும் உத்தரவுகளை மீறும் சந்தர்ப்பத்தில் வழக்கு தொடர்வதற்காக குறித்த ஆணைக்குழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்த அதிகாரத்தை குறைத்தல் மற்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் போன்று பொது நிறுவனங்களின் தணிக்கையாளர்களை அகற்றுதல், இரட்டை குடியுரிமை கொண்ட நபர்களுக்கு பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட காணப்பட்ட தடங்கல்களை நீக்குதல் போன்று பொதுமக்களுக்கு எதிரான பல ஏற்பாடுகள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் அடங்கியுள்ளதாக மனுதார் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேபோல், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ரத்துச் செய்யப்பட்ட அவசர சட்டமூலங்களை கொண்டு வருவதற்காக காணப்பட்ட வாய்ப்பு முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு தெரிவிக்காமல் இலஞ்ச சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் வாய்ப்பும் முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வாளராக நியமனம் பெற காணப்பட வேண்டிய தகுதிகளும் இதனூடாக நீக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தனது மனுவின் ஊடாக உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.