நேற்று (16) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் 20வது திருத்தம் தொடர்பில் காரசாரமாக பேசப்பட்டதாக அறிய வருகின்றது.
அரசியலமைப்பின் புதிய திருத்தத்தின் போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து அமைச்சர்கள் சிலர் கருத்து வெளியிட ஆரம்பித்த கையோடு அமைச்சரவைக்குள் வாக்குவாதம் ஆரம்பித்தது. 19வது திருத்தத்திற்கு ஆதரவளித்த அமைச்சர்களும் 20வது திருத்தம் தொடர்பில் வியாக்கியானங்களை முன்வைப்பதாக அமைச்சர் ஒருவர் கூறியதை அடுத்து வாக்குவாதம் மேலும் முற்றியது.
நீண்ட வாதப்பிரதிவாதங்களின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி அரசியலமைப்பைத் திருத்தவே மக்கள் தமக்கு ஆதரவளித்தார்கள் என்றும் அந்த செயல்பாட்டிலிருந்து தாம் ஒரு போதும் பின்வாங்கப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் மக்கள் வழங்கிய ஆணையில் 19வது திருத்தத்தை மாற்றி 20வது திருத்தத்தை கொண்டுவருமாறு அந்த ஆணையில் செய்தியொன்றை அவர்கள் வழங்கினார்கள்.
இரண்டு தடவைக்கு மேல் பதவி வகிக்க முடியாது. நாடாளுமன்றத்தின் ஆயுல் காலம் என்பவற்றில் நாம் மாற்றம் செய்யவில்லை. இதனை தவிர அனைத்து விடயங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். மக்கள் வழங்கிய ஆணையை நான் மீறப்போவதில்லை.
அரசியலமைப்பின் திருத்தம் தேவையென நாம் கூறியபோது அதற்கு எதிராக பிரதான எதிர்கட்சிக்கு மக்களிடம் 100 ஆசனங்கள் கூட கிடைக்கவில்லை. மக்கள் எமக்கு வழங்கிய ஆணை அதிலிருந்தே தெளிவாகின்றது. என்று ஜனாதிபதி கோட்டபாய காரசாரமாக குறிப்பிட்டதாக தெரிய வருகின்றது.
இதே வேலை 20வது திருத்தத்தில் உள்ள முரண்பாடுகளை ஆராய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் நேற்றைய தினம் அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட வில்லை.