Our Feeds


Friday, September 11, 2020

www.shortnews.lk

சடலமாக மீட்க்கப்பட்ட பத்திரிக்கையாளர் ஸக்கி ஓகஸ்ட் 19 ஆம் திகதி இரவு கடைசியாக வட்ஸ்-அப் பார்வையிட்டுள்ளார்

 



தி ஐலண்ட் (The Island) பத்திரிகையின் ஊடகவியலாளர் ஸக்கி ஜப்பார் அவரது வீட்டில் நேற்றுமுன்தினம் (09) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

தனியாக வசித்து வந்த அவர், ஒரு சில நாட்களாக அவர் பணி புரியும் நிறுவனத்திற்கு வராத நிலையில், அவரது வீட்டில் இவ்வாறு சடலமாக, மீட்கப்பட்டிருந்தார்.

60 வயதான ஸக்கி ஜப்பார், தனது தாயாரின் மரணத்தைத் தொடர்ந்து இலக்கம் 1084, பீரிஸ் மாவத்தை, குமாரகேவத்தை, பெலவத்தையிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 19 ஆம் திகதி இரவு அவர் கடைசியாக தனது வட்ஸ்-அப் செயலியை பார்வையிட்டுள்ளார் என, தி ஐலண்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அவரது உடல் அவரது மூத்த சகோதரரான, சல்மானால் நேற்றுமுன்தினம் (09) புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிக சுறுசுறுப்பாகவும், அலுவலகத்திலிருந்து இறுதியாகவும் வெளியேறும் நபர்களில் ஒருவரான ஸக்கி ஜப்பார், சில நாட்களாக கடமைக்கு திரும்பாமை தொடர்பில், அவருக்கு அறிமுகமானவர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் கேட்டறிந்த போதிலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை தலையிடாதிருக்கும் நோக்கில் மிகவும் ஆழமாக தேடவில்லை என, ஐலண்ட் பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அவரது சகோதரரான ஸல்மானை தொடர்பு கொள்ளக் கிடைத்ததாகவும், கடந்த வார இறுதியில் இடம்பெற்ற குடும்ப திருமண நிகழ்வொன்றிலும் ஸக்கி கலந்து கொள்ளவில்லை எனவும், இது தொடர்பில் அவரும் அவரது சகோதரியும் குழப்பமடைந்துள்ளதாக அறியக் கிடைத்ததாகவும் ஐலண்ட் பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ப்ரவுண்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஸக்கி, தற்போது செயற்படாத நிலையிலுள்ள சன் பத்திரிகையில் கடந்த 1985 ஆம் ஆண்டு இணைந்ததன் மூலம் ஊடகத் துறையில் இணைந்தார். அவர் 80 களின் நடுப்பகுதியில் ஐலண்ட் பத்திரிகையில் இணைந்துள்ளதோடு, அன்றிலிருந்து அங்கு பணி புரிந்து வந்துள்ளார்.

ஐ.தே.க. நெருங்கிய தொடர்பாளர்களுடனும் முந்தைய அரசாங்கத்துடனான மிக நெருக்கமான தொடர்புகளின் மூலம் அரசியல் தொடர்பான செய்திகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதோடு, எந்தவொரு வேலை நாளிலும் கடைசியாக அலுவலகத்திலிருந்து வெளியேறுபவர்களில் ஒருவர் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

ஸக்கியின் உடல் நேற்று (10) பத்தரமுல்லவில் உள்ள முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டதோடு, அவரது சகோதரரான ஸல்மானிடம் அவரது உடலை வழங்குமாறு கடுவல பதில் நீதவான் உத்தரவிட்டிருந்ததோடு, அவரது இறப்புக்கான காரணத்தை தீர்மானிக்க முடியாததால் இறப்புச் சான்றிதழை வழங்காதிருக்க, சட்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் சமீர குணரத்ன முடிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »