நாட்டுக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்த பாரிய அளவிலான ஒரு தொகை மஞ்சள் புளுமெண்டல் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது. 33 ஆயிரம் கிலோ கிராம் கொண்ட இவற்றின் பெறுமதி 11 கோடி ரூபாவுக்கும் கூடுதலாகும்.
பொலிசாருக்கு கிடைக்க தகவல்களுக்கு அமைய புளுமெண்டல் பகுதியில் களஞ்சிய தொகுதியொன்றில் 40 அடி நீளமான 3 கொள்கலன்களில் இருந்து மஞ்சள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக இக்கொள்கலன்களில் இருந்து மூவாயிரம் கிலோ உழுந்து மற்றும் கண்ணாடிகளும் கண்டெடுக்கப்பட்டன.
இச்சட்டவிரோத மஞ்சள் டுபாயில் இருந்து 3 நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு தருவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இப்பொருட்களை இறக்குமதி செய்ததாக கூறப்படுகின்ற மட்டக்குளி பகுதியை சேர்ந்த வர்த்தகரான மொஹமட் ரிஸ்வி உள்ளிட்ட ஏழு பேர் புளுமெண்டல் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள் இவற்றை சோதனையிட்டனர்.
“கைப்பற்றப்பட்ட மஞ்சளின் பெறுமதி 11 கோடி ரூபாவுக்கும் கூடுதலாகும் என அறியக்கிடைக்கின்றது. இவ்வகையில் சட்டவிரோதமாக துறைமுகத்தில் இருந்து எடுத்து வருவதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் இம்மோசடி வர்த்தகத்துடன் தொடர்புப்பட்டவர்களை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். இதற்கு மேலதிகமாக உழுந்து மற்றும் கண்ணாடிகளும் இங்கு காணப்பட்டன. இவற்றை மிகவும் நுணுக்கமான முறையில் எடுத்துச்செல்வதற்காக தயார்ப்படுத்தப்பட்டிருந்தன. இதனை எடுத்துச்செல்லும் போது வீதி சோதனையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு எவ்வித சந்தேகமும் ஏற்படாத வண்ணம் இவற்றை எடுத்துச்செல்வதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.”