நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளிகம பகுதியில் இன்று (15) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் படுங்காயங்களுக்குள்ளாகிய நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் அட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும், பொகவந்தலாவையிலிருந்து ஹட்டன் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக பஸ்ஸும் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என விசாரணைகளை மேற்கொண்டு வரும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இரு பஸ்களிலும் பயணித்தவர்களில் 11 பேர், காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 3 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு, 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-மலையக நிருபர் கிரிஷாந்தன்-