Our Feeds


Wednesday, July 1, 2020

www.shortnews.lk

ரிஷாத் - ஹக்கீமை அடக்குவதே அரசின் இலக்கு! - அரசாங்கத்தை கடுமையாக சாடினார் சஜித்

 


கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செய்வதே அதன் நோக்கம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமேதாஸ குற்றஞ்சாட்டினார்.

வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (01) மன்னார், தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“முஸ்லிம் தலைவர்கள் எவராவது குற்றமிழைத்திருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். சட்டத்தின் வழியே அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து, அவர்கள் மீது வேண்டுமென்றே குற்றஞ்சாட்டுவதும், தனிப்பட்ட ரீதியில் அவர்களது கௌரவத்தையும் நற்பெயரையும் அழிப்பதும் கேவலமான செயலாகும். இவ்வாறான விடயங்களை சில ஊடகங்கள் செய்திகளாகவும் வெளியிடுகின்றன. அவற்றையும் நிறுத்தவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீனும், ரவூப் ஹக்கீமும் என்னை வெற்றிபெற வைப்பதற்காக பாரிய பிரயத்தனங்களைச் செய்தனர். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் பல்வேறு துன்பங்களையும் தூசிப்புக்களையும் அவர்கள் எதிர்நோக்கினர். அவர்கள் என்னுடன் தொடர்ந்தும் பயணிப்பதால், மோசமான முறையில் விமர்சிக்கப்படுகின்றனர். வேண்டுமென்றே துன்புறுத்தப்படுகின்றனர்.
இந்த நாடு ‘ஒற்றையாட்சிக்குட்பட்டது’ என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லாத போதும், அனைத்து சமூகங்களுக்கும் தமது வாழ்வுரிமை, அரசியல் மற்றும் கலாச்சார உரிமைகளை பேணுவதில் சமத்துவம் வழங்கப்பட வேண்டும். சட்டத்தில் மட்டும் ‘ஒற்றையாட்சி’ என்று குறிப்பிட்டுவிட்டு, அதனை ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது. அதற்காக பல தியாகங்களையும் முன்னெடுப்புக்களையும் செய்ய வேண்டியிருக்கின்றது. அவை வெறுமனே வார்த்தை ஜாலங்களாகவும், எழுத்துக்கள் வடிவிலும் இருந்தால் மட்டும் போதாது. அதில் பயனில்லை. சமூக ஒற்றுமையும், இன ஐக்கியமும் உள்ளங்களிலிருந்தே எழவேண்டும். அதன்மூலம்தான், நாம் எதிர்பார்க்கின்ற ஒற்றையாட்சிக்குரிய இலக்குகளையும், இலட்சணங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். மக்களின் உரிமைகளும், முறையான பாதுகாப்பும் இதன்மூலமே வழிகோலப்பட வாய்ப்பிருக்கின்றது. அவ்வாறான இலக்கை நோக்கிய பயணத்தையே நான் முன்னெடுத்து வருகின்றேன். எதிர்காலத்திலும் முன்னேடுப்பேன்.
“இனவாதம்” என்பது ஒரு பெரிய விஷக்கிருமி. இதனால் நாம் பட்ட துன்பத்தை நீங்கள் அறிவீர்கள். இந்தக் கிருமியை நாம் அழிக்க வேண்டும். 1993ம் ஆண்டு, மே மாதம் 01 ஆம் திகதி எனது தந்தை படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப்புலி உறுப்பினரே அந்தப் படுபாதகத்தைச் செய்தார். அவர் ஒரு தமிழராக இருந்த போதும், அவர் செய்த தவறுக்காக, நாங்கள் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் பழி சொல்லவில்லை. அவர்களை பழிவாங்கவுமில்லை. அதேபோன்று, தமிழர்களை சந்தேகக்கண் கொண்டு நோக்கவுமில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், அடிப்படைவாதக் கொள்கையுடைய ஒருசிலர், ஒன்று சேர்ந்து செய்தனர். அதற்காக அவர்கள் சார்ந்த முஸ்லிம் சமூகத்தையும், இஸ்லாம் மதத்தையும் வஞ்சிப்பதும், அவர்களை அழிக்கத் துடிப்பதும் மோசமான காரியம். முஸ்லிம்களின் நற்பெயர்களை அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் செயற்பாடுகள் கைவிடப்பட வேண்டும்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நான் பிரதமரானதும், இனவாத சக்திகளுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். இனவாதத்தையும் மதவாதத்தையும் இல்லாமல் செய்வேன்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு உள்ளடங்கிய வன்னி தேர்தல் தொகுதியில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நாம் பெருவெற்றி பெறுவோம். அதற்காக நீங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். எதிர்காலத்திலே வன்னியிலே பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு, மக்களின் நல்வாழ்வுக்கு நாம் பணியாற்றுவோம் என்பதை உறுதிபடத் தெரிவிக்கிறேன்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், வேட்பாளர்களான சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக், பகீரதன், ரஞ்சன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பாயிஸ், ரிப்கான், பிரதேச சபை தலைவர்களான சுபியான், முஜாஹிர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »