Our Feeds


Thursday, July 2, 2020

www.shortnews.lk

தேர்தல் பிரச்சாரத்தில் எனது புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது - கோட்டா அதிரடி

 



எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

அதுபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் அரசியல் பணிகளில் ஈடுபடக் கூடாதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளில் ஜனாதிபதி அவர்களின் புகைப்படங்களை பயன்படுத்துவதாகவும் இராணுவம் மற்றும் அரச அதிகாரிகளை சம்பந்தப்படுத்திக் கொள்வதாகவும் பல்வேறு நியமனங்களை பெற்றுத் தருவதாக குறிப்பிடுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அவர்கள் அனைத்து ஆளுநர்கள், அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், நியதிச்சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய துறைத் தலைவர்களுக்கு ​நேற்று (01) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு ஜனாதிபதியின் புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாமென்றும் அரச ஊழியர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமென்றும் கடுமையாக அறிவுறுத்துமாறும் ஜனாதிபதி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அனைத்து அரச ஊழியர்களும் இவ் அறிவுறுத்தலை பின்பற்றுமாறும் ஜனாதிபதியின் செயலாளர், ஆளுநர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் பிரதியொன்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »