உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் துரிதப்படுத்தப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ள
நிலையில், அமெரிக்காவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை புதன்கிழமை முதல் தடவையாக 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் மட்டும் 52,898 புதிய கொரோனா
தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 இலட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள்.
நாளொன்றுக்கு 40 ஆயிரம்
பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா தவறான
பாதையில் பயணிப்பதாகவும் இதே நிலை நீடித்தால் அன்றாடம் பாதிக்கப்படுபவர்களின்
எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டும் என அந்நாட்டின் தொற்று நோய் நிபுணர் அந்தோனி
பௌசி எச்சரித்துள்ளார்.
உள்ளக அரங்க கூட்டங்கள், மதுபானசாலைகளில் ஒன்று கூடுதல் ஆகியவை கொரோனா தொற்று பரவ
முக்கிய காரணமாக மாறியுள்ளதாக பௌசி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணாங்களில் தொற்று அதிகம் பரவுவதாக எச்சரித்துள்ள
பௌசி, நியூயோர்க், கலிபோர்னியா, டெக்சாஸ் மற்றும் நியூஜெர்சி
மாகாணங்களின் செயல்பாடுகள் தனக்கு திருப்தி அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.07 கோடியாக உயர்வு. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5.18 இலட்சமாக
உயர்வு. இதுவரை கொரோனாவிலிருந்து 59 இலட்சம்
பேர் மீண்டுள்ளனர். 43 இலட்சம்
பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 57,968 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வருகிறார்கள்.