Our Feeds


Friday, June 26, 2020

www.shortnews.lk

Dr ஷாபி மீது குற்றம் சாட்டிய பெண்ணின் பலோபியன் குழாயில் எந்த தடைகளும் இல்லை - HSG பரிசோதனையில் உறுதி

 

மகப்பேற்று மருத்துவர் ஷாபி ...

குருணாகல் போதனா வைத்தியசாலையின்  பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராக  இருந்த சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மீது, கருத்தடை விவகார முறைப்பாட்டை முன்வைத்த பெண் ஒருவருக்கு, குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட எச்.எஸ்.ஜி. பரிசோதனைகளில், அவரது பெலோபியன் குழாயில் எந்த தடைகளும், தடங்கல்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.  

பெலோப்பியன் குழாயில் தடை ஏற்படுத்துவதன்  ஊடாக  சிங்கள தாய்மார்களுக்கு சட்ட விரோத கருத்தடைசெய்தார் என  வைத்தியர்  சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி  மீது  குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையிலேயே, குருணாகல் நீதிமன்றின்  உத்தரவில் குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில்நதீகா எனும் முறைப்பாட்டாளரான பெண்ணுக்கு எச்.எஸ். ஜி. பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த பெண்ணுக்கு வைத்தியர் ஷாபி சிஹாப்தீன்  எல்.ஆர்.டி. சத்திர சிகிச்சையை , அப்பெண்ணின் அனுமதியின்று செய்ததாக குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே, நீதிமன்ற உத்தரவில் இந்த எச்.எஸ்.ஜி. பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை தொடர்பில்   சி.ஐ.டி.யின் இந்த விவகாரத்தை தற்போது கையாளும் பிரதான பொலிஸ் பரிசோதகர்  மொஹான் விஜேகோனும், அந்த பரிசோதனையின் முடிவினை தாய்மார் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி சானக அபேவிக்ரமவும் மன்றில் வெளிப்படுத்தினார்.

 இதன்போது குளியாப்பிட்டி  போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட எச்.எஸ்.ஜி. பரிசோதனைகளில் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும், குளியாப்பிட்டி வைத்தியசாலை தொடர்பிலேயே நம்பிக்கை இல்லாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்ட சட்டத்தரணி சானக அபேவிக்ரமஇந்த பரிசோதனை முடிவு வைத்திய மாபியாவின் ஒரு அங்கம் என எண்ணத்தோன்றுவதாக கூறினார்.

சட்டவிரோத கருத்தடை விவகாரம் தொடர்பில்  குருணாகல் போதனா வைத்தியசாலையின்  பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு  எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும்  நீதிவான் நீதிமன்ற விசாரணைகள்  நேற்று குருணாகல் பிரதான நீதிவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது பிணையில் உள்ள வைத்தியர் ஷாபி மன்றில் ஆஜராகியிருந்தார். அவர்சார்பில்   சட்டத்தரணி சமீல் மொஹம்மட் ஆஜரானார்.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தாய்மார்கள் சார்பில் சட்டத்தரணி சானக அபேவிக்ரம தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜரானது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில், சமூக கொள்ளை விசாரணைன் அறையின் பிரதான பொலிஸ் பரிசோதகர் மொஹான் விஜேகோன்  மேலதிக அறிக்கையுடன் ஆஜரானார்.

இதன்போது நீதிவான், மேலதிக விசாரணை தொடர்பில் வினவிய போது, மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து பிரதான பொலிஸ் பரிசோதகர் பின்வருமாறு விடயங்களை முன்வைத்தார்.

' நாட்டில் நிலவிய கொவிட் தொற்றுடன் கூடிய நிலைமையால் பெரும்பாலான விசாரணைகளை திட்டமிட்டவாறு முன்னெடுக்க முடியவில்லை.

 எவ்வாறாயினும்  தனது விருப்பத்துக்கு மாறாக தனக்கு வைத்தியர் ஷாபி எல்.ஆர்.டி. சத்திர சிகிச்சையை முன்னெடுத்ததாக முறைப்பாடளித்த நதீகா எனும் பெண்ணைநீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக  கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில்  ஆஜர்செய்தோம். அதன்படி அப்பெண்ணுக்கு பெப்ரவரி 25 ஆம் திகதி அந்த பரிசோதனைகளுக்காக குளியாப்பிட்டி வைத்தியசாலையில் ஆஜராகுமாறு கூறப்பட்டது.

அதன்படி அப்பெண் அந்தத்திகதியில் அங்கு  அனுமதிக்கப்பட்டார்.

 இந் நிலையில் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி அப்பெண்ணுக்கு காலை வேளையில் ஜயதிலக எனும்  வைத்தியரால் எச்.எஸ்.ஜி. பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த பரிசோதனை இடை நடுவில்  தோல்வி அடைந்துள்ளது.

 பின்னர் அன்றைய தினம் மாலைசிரேஷ்ட வைத்தியரான  மெத்தியூஸ் அப்பெண்ணுக்கு எச்.எஸ்.ஜி. பரிசோதனைகளை  முன்னெடுத்துள்ளார். 

அதன் பின்னர் அந்த பெண்ணுக்கு பரிசோதனையின் பின்னரான இரத்த போக்கு நிலைமை காரணமாக குளியாபிட்டி மற்றும், குருணாகல் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுள்ளதுடன், அது குறித்தும் அவரிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளோம். அந்த பரிசோதனையின் முடிவு இதுவரை சி.ஐ.டி.க்கு கிடைக்கவில்லை. அது இம்மன்றுக்கு அனுப்பட்டுள்ளதாக அறிகின்றோம். எனவே அதன் பிரதி ஒன்றினை எமக்கு விசாரணைகளுக்காக தருமாறு கோருகின்றோம்.

 முன்னைய விசாரணைகளில் வாக்கு மூலம் பெறப்பட்ட தாய்மார்களிடம் மீள வாக்கு மூலம் பெறும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

 அதனைவிடஇதுவரை  விசாரணைகளில்  வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுடன் ஒன்றாக பணியாற்றியதாக கூறப்படும் 57 வைத்தியர்கள்,  62 தாதியர், 64 குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களிடம் நாம் வாக்கு மூலம் பெற்றுள்ளோம்.

 அவ்வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்ட போது தெரியவந்த சில விடய்ங்களை நான் கூற வேண்டும்.

 முதலாவது 20 தாதியர்கள்வைத்தியர் ஷாபி சிசேரியன்  சத்திர சிகிச்சையின் போது  ' வொஸ் டவல் ' எனும் துவாய் ஒன்றை பயன்படுத்தி கர்ப்பப் பையை துடைப்பதாக கூறியுள்ளனர்.

 அட்த்துடன் 15 தாதியர்கள் , ஷாபி வைத்தியர் சிசேரியனின் போது சிங்கள தாய்மாருக்கு ஒரு தையலும், முஸ்லிம் தாய்மாருக்கு இரு தையலும் போடுவதாக கூறியுள்ளனர்.

 அத்துடன் சிங்கள தாய்மாருக்கு சிசேரியன் செய்யும் போது தேவையற்ற குழப்ப நிலையை வைத்தியர் ஷாபி ஏற்படுத்துவதாக வைத்தியர்கள் 4 பேர், 7 தாதியர்கள், 3 குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் வாக்கு மூலமளித்துள்ளனர்.

 முஸ்லிம் தாய்மாருக்கு சிசேரியன் செய்து குழந்தைகளை வெளியில் எடுக்கும் போது, மத அனுஷ்டாங்களை ஷாபி வைத்தியர் செய்வதாக  5 வைத்தியர்கள்,  20 தாதியர்கள், 6 குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

 வைத்தியர் ஷாபி, ஏனையவர்களைவிட வேகமாக சத்திர சிகிச்சை ஒன்றினைச் செய்வதாக 29 வைத்தியர்கள், 40 தாதியர்கள், 30 குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

 இந் நிலையில்  இந்த விவகாரத்தில், நீதிமன்றினால் நியமிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீட பீடாதிபதியின் கீழான குழுவின் அவதானிப்புக்கள் பிரகாரம், கர்ப்பப் பையை, அதன் சுவர்களை அழுத்தமாக துடைக்கும் போது அங்கு சிதைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். 

அத்துடன்  அந்த விஷேட வைத்திய நிபுணர்கள், கருத்தடை செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்ய லெத்தஸ்கொபி உள்ளிட்ட  இரு பரிசோதனை முறைகளை  பரிந்துரைத்துள்ளனர்.

 அத்துடன் வைத்தியர் ஷாபி முன்னெடுத்த சிசேரியன் சத்திர சிகிச்சைகளையும், அதே காலப்பகுதியில் ஏனைய வைத்தியர்கள் முன்னெடுத்த சிசேரியன் சத்திர சிகிச்சைகளையும் ஒப்பு நோக்கி புள்ளிவிபரவியல் ரீதியிலான பகுப்பாய்வொன்றினை முன்னெடுப்பதும் சிறந்தது என வைத்திய நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

 அத்துடன் வைத்தியர் ஷாபி  முஸ்லிம் தாய்மாருக்கு முன்னெடுத்த சிசேரியன் சத்திர சிகிச்சைகள் குறித்த தகவல்களையும் நாம் ஆராய்வுள்ளோம். ' என கூறியதுடன் வைத்தியர் ஷாபியின் 3 வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களையும் நீதிமன்றுக்கு கையளித்தார்.

 இதனையடுத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தாய்மார் சார்பில் சட்டத்தரணி சானக அபேவிக்ரம மன்றில் விடயங்களை முன்வைத்தார்.

' கனம் நீதிவான் அவர்களே, நதீகா எனும் தாய்க்கு 2020.02.26 ஆம் திகதி காலை 7.30 மனியளவில் எச்.எஸ்.ஜி. பரிசோதனையை முதலில் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது தோல்வியடைந்ததாக கூறப்படுகின்றது.

 அதன் அர்த்தம் பெலோபியன் குழாயில் தடைகள் இருந்துள்ளன என்பதே எமது நிலைப்பாடு.

 பின்னர்  பிற்பகலில் சிரேஷ்ட வைத்தியர் ஒருவரால் எச்.எஸ்.ஜி. பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அதிக வேதனையும் வலியையும் உணர்ந்ததாகவும் தான் சப்தமிட்டு அழுததாகவும் நதீகா எனும் தாய் கூறியுள்ளார்.  அவருக்கு அதன் பின்னர் அதிக இரத்த போக்கும் ஏற்பட்டுள்ளது.

 அவ்வாறு செய்யப்பட்ட எச்.எஸ்.ஜி. சோதனைகளின் பின்னர் பெலோபியன் குழாயில் எந்த தடைகளும் இல்லை என அறிக்கை கொடுத்துள்ளனர்.

 இந்னிலையில் குளியாப்பிட்டி வைத்தியசாலை தொடர்பிலான நம்பிக்கையில் கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் எல்லோரும் ஒரே வைத்திய மாபியாவின் கீழ் உள்ள வைத்தியர்கள். அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.

 எச்.எஸ்.ஜி. போன்ற சோதனைகளை இதன் பிறகு குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் முன்னெடுக்க அனுமதிக்க கூடாது. இனிமேல் அவ்வாறான பரிசோதனைகளை முன்னெடுக்கும் போது, கொழும்பு பல்கலையின்  மருத்துவ பீடாதிபதியின் கீழான நிபுணர்களில் ஒருவர் அதனை மேற்பார்வை செய்யும் வகையில்  உத்தரவிட வேண்டும். எந்த வைத்தியசாலையில் யார் அந்த சோதனைகளை முன்னெடுத்தாலும் அவ்வாறான நிலைமை ஒன்று பின்பற்றப்படல் வேண்டும். ' என்றார்.

 இதன்போது தாய்மார் சார்பில் ஆஜரான மற்றொரு பெண் சட்டத்தரணி, எச்.எஸ்.ஜி. பரிசோதனைகளை யார் முன்னெடுத்தாலும்  அவை குருணாகல் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சந்தன கெந்தன்கமுவவின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்படவேண்டும் என உத்தரவிடுமாறு கோரினார்.

 எனினும் சந்தன கெந்தன்கமுவ இவ்வழக்கின் ஒரு சாட்சியாளர் என்ற ரீதியில் அவருக்கு மேற்பார்வை பொறுப்பை சுமத்த முடியாது என நீதிவான் அக்கோரிக்கையை நிராகரித்தார்.

 எனினும்  எதிர்காலத்தில் எச்.எஸ்.ஜி. அல்லது லெத்தோகொபி என எந்த பரிசோதனைகளை முன்னெடுத்தாலும் அதனை எந்த வைத்தியசாலையில் எவ்வாறு, யாரின் மேற்பார்வையில் முன்னெடுப்பது என  கொழும்பு பல்கலைக்கழகத்தின்  மருத்துவ பீடாதிபதியின் கீழான விஷேட நிபுணர்கள் குழுவுடன் ஆலோசித்து  மன்றுக்கு அறியத் தருமாறு நீதிவான் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.  அதன்படி வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


( எம்.எப்.எம்.பஸீர்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »