Our Feeds


Tuesday, June 16, 2020

www.shortnews.lk

பாடசாலை இடைவேளை நேரத்தை பல தடவைகளில் வழங்க தீர்மானம்.

 

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் போது பாடசாலை வளவுக்குள் மாணவர்கள் கூடுதல் மற்றும் குழுக்களாக இணைதல் ஆகியவற்றை தடுக்கும் வகையில் பாடசாலை இடைவேளை நேரத்தை பல தடவைகளாக ஏற்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.  
அது தொடர்பான அறிவுறுத்தல்களை கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு வழங்கியுள்ளதுடன், வகுப்பறைக்குள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் அத்துடன் பாடசாலை ஆரம்பிக்கும் போதோ அல்லது முடிவடையும் போதோ மாணவர்கள் ஒன்று கூடுதல் மற்றும் குழுக்களாக இணைந்து பேசுவது ஆகியவற்றுக்கு இடமளிக்க வேண்டாமென்றும் கல்வியமைச்சு அதிபர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.  
மாணவர்களுக்கிடையிலான இடைவெளியை ஒரு மீற்றர் தூரமாகப் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கேற்றவாறு மேசை மற்றும் கதிரைகளை ஏற்பாடு செய்யவும் வகுப்புக்களின் இடவசதிக்கமைய மாணவர் எண்ணிக்கையை அனுமதிக்குமாறும் கல்வியமைச்சு கேட்டுள்ளது.  
பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வு மற்றும் பல் சிகிச்சை நிலையங்களை திறப்பதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறும் கூட்டங்கள், ஒருவரை ஒருவர் தொடுதல் சம்பந்தப்பட்ட விளையாட்டுக்கள், கல்விச் சுற்றுலா போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  
மலசலகூடங்களிலும் ஒரு மீட்டர் தூர இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  
மிக அவசியமாகத் தேவைப்படும் பட்சத்தில் மட்டும் பாடசாலை நிர்வாகத்தினர் கூட்டங்களை நடத்த முடியும் என்றும் அந்த சந்தர்ப்பத்திலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன் பெற்றோர்கள் பாடசாலை வாசல்களில் கூடுவதை தடை செய்யுமாறும் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »