Our Feeds


Tuesday, June 16, 2020

www.shortnews.lk

ஹைட்ராக்சிகுளோரோகுயின் பலன் தரவில்லை - கொரோனா சிகிச்சையை நிறுத்தியது அமெரிக்கா

 

ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மலேரியா தடுப்பு மருந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்துவதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் நிறுத்தியுள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக இந்த மருந்து செயல்படவில்லை என்பது சமீபத்திய சோதனையில் தெரியவந்துள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஆட்டத்தையே மாற்றப் போகிறது என்று குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், கோவிட்-19 கிசிச்சைக்கு அதைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தினார்.
கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களின் அவசர சிகிச்சைக்காக இந்த மருந்தைப் பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் கடந்த மார்ச் மாதம் அனுமதியளித்தது.
ஆனால், இந்த மருந்து கொரோனா சிகிச்சையின்போது எந்த பலனையும் தரவில்லை என்பதும், மக்களுக்குத் தொற்று ஏற்படுவதையும் இந்த மருந்து தடுக்கவில்லை என்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது என அந்த அமைப்பு இப்போது தெரிவித்துள்ளது.
ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்து மலேரியாவின் சிகிச்சைக்காக பயன்படுத்துவது பாதுகாப்பானது. ஆர்திரிடிஸ் போன்ற பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தலாம்.
ஆனால், கொரோனா தொற்றாளர்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள இதுவரை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் ஏதும் பரிந்துரைக்கவில்லை.
இந்த மருந்து கோவிட்-19 தொற்றை குணப்படுத்தும் என்றும் இதுவரை எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை.

டொனால்டு டிரம்ப் பரிந்துரைத்த மருந்து

உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், கொரோனா வைரசைத் தடுக்கும் நடவடிக்கையாக முன்பு இந்த மருந்தை எடுத்துக்கொண்டதாகவும், இதனால் தனக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
''நான் அந்த மருந்தை இரண்டு வாரங்கள் உட்கொண்டேன். நான் இப்போதும் நன்றாக இருக்கிறேன்,'' எனச் செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களை இந்த மருந்து காப்பாற்றியதாகப் பலர் தன்னிடம் தெரிவித்தனர் எனவும் டிரம்ப் கூறினார்.
கடந்த மே மாதம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தைத் தான் எடுத்துக்கொள்வதாக டிரம்ப் தெரிவித்தார்.
ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்தை உட்கொண்டால் இருதயப் பிரச்சனைகள் வரும் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்தாலும், தாம் எடுத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
டிரம்ப் தெரிவித்த கருத்து உலகம் முழுக்க கவனத்தை ஈர்த்த நிலையில், பல நாடுகளும் ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்தை கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்துச் சோதனையில் இறங்கின.

'நோயாளிகள் இறக்கும் அபாயம் அதிகம்'

ஆனால், ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்தை கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு அளிப்பதால் எந்த பயனும் இல்லை என்றும், மாறாக அதனால், நோயாளிகள் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக 'லேன்செட்' அறிவியல் சஞ்சிகை தெரிவித்தது.
96,000 கொரோனா நோயாளிகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 15,000 பேருக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தோ அல்லது இதை ஒத்த மருந்தோ அளிக்கப்பட்டது.
இந்த மருந்து அளிக்கப்பட்டவர்கள் மற்ற கொரோனா நோயாளிகளை விட மருத்துவமனைகளில் அதிகம் இறக்க வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு இருதய பிரச்சனைகள் ஏற்படவும் அதிக வாய்ப்பிருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொண்டவர்களின் இறப்பு விகிதம் 18 சதவீதமாக இருந்தது. இதை ஒத்த குளோரோகுயினை உட்கொண்டவர்களின் இறப்பு விகிதம் 16.4 சதவீதமாக இருந்தது.
அதன் பின்னர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக நாடுகள் இந்த மருந்தின் சோதனையை நிறுத்தின. பின்னர் மருத்துவ ரீதியில் கொரோனா தொற்றாளர்களுக்கு மீண்டும் அந்த மருந்தை சோதனை செய்வதற்கு உலக சுகாதார நிறுவனம் தொடங்கியது.
ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்தை, தாங்கள் கேட்டபடி இந்தியா கொடுக்க முன்வராவிட்டால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். பின்னர் அதை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ப விதிகளை இந்தியா திருத்தியது.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் - உலகளவில் இந்தியாவில் அதிக உற்பத்தி


கொரோனா தாக்குதலுக்குள்ளான அதிக ஆபத்து உள்ளவர்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஏப்ரல் மாதம் பரிந்துரை செய்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள், கொரோனா வைரஸ் சந்தேகத்துக்கு இடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பராமரிப்பில் ஈடுபடுபவர்கள், ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் இந்த மருந்தை உட்கொள்ளலாம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.
உலக அளவில் விநியோகம் செய்யப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தில், சுமார் 70 சதவீதம் இந்தியாதான் உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு 40 டன் அளவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தயாரிப்பதற்கான மூலக்கூறு உற்பத்தி செய்யப்படுகிறது.
இது 200 மில்லி கிராம் அளவிலான 20 கோடி மாத்திரைகளை தயாரிக்க உதவுகிறது. குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின், மலேரியா, முடக்குவாதம் உள்ளிட்ட சில நோய்களுக்கான எதிர்ப்பு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பி.பி.சி

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »